ADDED : ஜூலை 06, 2026 12:19 AM

சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள லுமென் பீல்டு மைதானத்தில் நடக்கும் 'ரவுண்டு--16' போட்டியில் அமெரிக்க அணி, வலுவான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ளது பெல்ஜியம். லீக் சுற்றின் முதல் இரு போட்டியில் ‛டிரா' (1--1, எதிர்: எகிப்து, 0--0, எதிர்: ஈரான்) செய்தாலும், அடுத்து நியூசிலாந்தை 5--1 என வீழ்த்தியதால் 'ரவுண்டு-32' சுற்றுக்கு முன்னேற முடிந்தது. சியாட்டிலில் நடந்த இப்போட்டியில், செனகலை சந்தித்தது. போட்டியின் 85 நிமிடம் வரை 0--2 என பின்தங்கி இருந்தது பெல்ஜியம். 'ரெட் டெவில்ஸ்' என செல்லமாக அழைக்கப்படும் இந்த அணி, பின் அடுத்தடுத்து இரு கோல் அடிக்க, கூடுதல் நேரம் வரை சென்று செனகலை சாய்த்தது.
2018 தொடருக்குப் பின் இரண்டு கோல் பின்தங்கிய நிலையில், 'நாக்-அவுட்' போட்டியில் வெற்றி பெற்ற அணி என சாதித்தது. தவிர, மீண்டும் சியாட்டிலில் களமிறங்கியுள்ளது நம்பிக்கை தரலாம்.உலக கோப்பை அரங்கில் 'கன்காகப்' அணிகளுக்கு எதிராக மோதிய 3 போட்டியிலும் பெல்ஜியம் வென்றுள்ளது. முன்கள தாக்குதலில் 'சீனியர்' வீரர் ரோமேலு லுாகாகு, தியலிமான்ஸ், லியாண்ட்ரோ டிராஸ்சார்டு தலா 2 கோல் அடித்து அணிக்கு உதவியுள்ளனர். டி புருய்ன், டோகு, கோல் கீப்பர் கோர்டாய்சும் அமெரிக்காவுக்கு சிக்கல் தரலாம்.
சொந்தமண் ராசியா: உலகத் தரவரிசையில் 17வது இடத்திலுள்ள அமெரிக்க அணி சொந்தமண்ணில் பங்கேற்றுள்ளது பலம். முதல் இரு போட்டியில் பராகுவே (4--1), ஆஸ்திரேலியாவை (2--0) வென்றது. அடுத்து துருக்கியிடம் (2--3) போராடி தோற்றது. எனினும் 'ரவுண்டு--32' போட்டியில் போஸ்னியாவை (2--0) சாய்த்து, வெற்றிப் பாதைக்கு திரும்பியது.முன்கள தாக்குதல் வீரர் பாலோகன், இதுவரை 2 கோல் அடித்துள்ளார். ரேய்னா, பிரீமான், டிரஸ்டி, பெர்ஹால்டர் தலா ஒரு கோல் அடித்துள்ளனர். இம்முறை கோல்கீப்பராக பிரீசே செயல்பட, தற்காப்பு பகுதியை ராபின்சன், ரிச்சர்ட்ஸ், பிரீமான் கவனித்து கொள்வர். முன்களத்தில் புலிசிச், பெபி, தெஸ்ட், மத்திய களத்தில் மெக்கென்னியே, தில்மான் இடம் பெற உள்ளனர்.
6 தோல்வி
கடந்த 1930 உலக கோப்பை தொடரில் அமெரிக்கா, பெல்ஜியத்தை 3--0 என வென்றது. இதன் பின் இரு அணிகள் மோதிய அனைத்து போட்டியிலும் (6), பெல்ஜியத்திடம் தோற்றுள்ளது அமெரிக்கா. இப்போட்டிகளில் அமெரிக்கா, மொத்தம் 15 கோல் விட்டுக்கொடுத்தது.
