ADDED : ஜூலை 06, 2026 12:05 AM

மயாமி: உலக கோப்பை கால்பந்து 23வது சீசனில் கேப் வெர்டே அணி அறிமுகமானது. அட்லாண்டிக் பெருங்கடலில், மேற்கு ஆப்ரிக்க கரையில் அமைந்துள்ள சிறிய தீவு தான் கேப் வெர்டே. இதன் மக்கள் தொரை 5 லட்சம். இதனால் இந்த அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்படவில்லை. லீக் சுற்றோடு வெளியேறிவிடும் என்று கணித்தனர்.
ஆனால் லீக் சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயினுக்கு 'தண்ணி' காட்டியது. கடைசி நிமிடம் வரை போராடிய ஸ்பெயின் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. தொடர்ந்து அசத்திய கேப் வெர்டே அணி, உருகுவே (2-2), சவுதி அரேபியாவுக்கு (0-0) எதிரான லீக் போட்டிகளையம் 'டிரா' செய்தது.
'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறிய மிகச் சிறிய நாடான கேப் வெர்டே, 'ரவுண்டு-32' போட்டியில், 'நடப்பு சாம்பியன்' அர்ஜென்டினா சந்தித்தது. இதில் அர்ஜென்டினா எளிதல் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்யாவின் 40, துடிப்பான செய்பாடு, அர்ஜென்டினாவின் மெஸ்ஸியை திணறச் செய்தது. இப்போட்டியில் மெஸ்ஸி, கோல் அடிக்க முயற்சித்த 5 வாய்ப்புகளை தடுத்தார் வோசின்யா. கடைசி நேரத்தில் அடித்த 'சேம்சைடு' கோலால் கேப் வெர்டே அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இருப்பினும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது கேப் வெர்டே.
வோசின்யா கூறுகையில், ''ஓய்வு எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. தொடரில் இருந்து வெளியேறினாலும், எங்கள் அணி வீரர்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டை எண்ணி பெருமை கொள்கிறேன். கால்பந்து அரங்கில் சாதனை படைப்போம்,'' என்றார்.
