ADDED : ஜூலை 15, 2024 11:16 PM

மயாமி: கோபா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி 16வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று நடந்த பைனலில், கொலம்பியாவை வீழ்த்தியது.
அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடந்தது. மயாமி (புளோரிடா), ஹார்டு ராக் மைதானத்தில் நடந்த பைனலில், உலகின் 'நம்பர்-1' அணியும் நடப்பு சாம்பியனுமான அர்ஜென்டினா அணி, 12வது இடத்திலுள்ள கொலம்பியாவை சந்தித்தது.
போட்டியின் 35 வது நிமிடம் மெஸ்சியிடம் இருந்து பந்தை பறிக்கச் சென்ற கொலம்பிய வீரர் அரியாஸ், நேருக்கு நேராக மோதினார். இதனால் வலது கணுக்கால் வலியால் துடித்த மெஸ்சி, 3 நிமிடத்துக்குப் பின் போட்டியை தொடர்ந்தார். 63வது நிமிடத்தில் தியாசிடம் இருந்து பந்தை பெற ஓடிய மெஸ்சியின் காலில் வலி ஏற்பட, துடித்தார். இருப்பினும் போட்டியை தொடர்ந்த இவர், வேறு வழியில்லாத நிலையில் 66வது நிமிடத்தில் வெளியேற, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பைனலில் அணியை கரை சேர்க்க முடியாத விரக்தி ஏற்பட, மைதானத்துக்கு வெளியே இருந்த மெஸ்சி, அழுதார். பின் போட்டியை பார்த்துக் கொண்ட, அவ்வப்போது 'அட்வைஸ்' கொடுத்து, சக வீரர்களை உற்சாகப்படுத்தினார். இறுதியில் அர்ஜென்டினா வெல்ல, மகிழ்ச்சி அடைந்தார்.
45 வது கோப்பை
சர்வதேசம், கிளப் கால்பந்து அரங்கில் அதிக கோப்பை வென்ற வீரர் ஆனார் அர்ஜென்டினாவின் மெஸ்சி. 2005ல் 10 லா லிகா (பார்சிலோனா அணி), 7 கோபா டெல் ரே, 7 சூப்பர் கோப்பை, 4 ஐரோப்பா கோப்பை, 3 ஐரோப்பா சூப்பர் கோப்பை, 3 கிளப் உலக கோப்பை, 2 கோபா அமெரிக்கா, ஒரு உலக கோப்பை உட்பட இதுவரை 45 கோப்பை வென்றுள்ளார். அடுத்த இரு இடத்தில் பிரேசிலின் டெனி ஆல்வ்ஸ் (43), ஸ்பெயினின் இனியஸ்டா (39) உள்ளனர்.
