/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
'யூரோ': காலிறுதியில் ஸ்பெயின், பிரான்ஸ்
/
'யூரோ': காலிறுதியில் ஸ்பெயின், பிரான்ஸ்
UPDATED : ஜூலை 02, 2024 12:04 AM
ADDED : ஜூலை 01, 2024 11:14 PM

கொலோன்: 'யூரோ' கோப்பை கால்பந்து காலிறுதிக்கு ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் முன்னேறின.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) நடக்கிறது. இதுவரை ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இதன் 'ரவுண்டு-16' போட்டியில் உலகின் 'நம்பர்-8' ஸ்பெயின் அணி, 74வது இடத்தில் உள்ள ஜார்ஜியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஸ்பெயினின் ராபின் லெ நார்மண்ட் 'சேம்சைடு' கோல் அடிக்க ஜார்ஜியா 1-0 என முன்னிலை பெற்றது. பின் எழுச்சி கண்ட ஸ்பெயின் அணிக்கு 39வது நிமிடத்தில் ரோட்ரி ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு பேபியான் (51வது நிமிடம்), வில்லியம்ஸ் (75வது), டேனியல் ஆல்மோ (83வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி வரை போராடிய ஜார்ஜியா அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஸ்டட்கர்ட்டில் ஜூலை 5ல் நடக்கவுள்ள காலிறுதியில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.