சாம்பியன் வீரர்களுக்கு மோதிரம் * 'பிபா' புதிய அறிவிப்பு
சாம்பியன் வீரர்களுக்கு மோதிரம் * 'பிபா' புதிய அறிவிப்பு
ADDED : ஜூலை 17, 2026 11:12 PM

நியூ ஜெர்சி: உலக கோப்பை பைனலில் சாதிக்கும் அணி வீரர்களுக்கு, முதன் முறையாக, மோதிரம் பரிசு வழங்க, 'பிபா' முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் நடக்கும் உலக கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை, எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 8,387 கோடி வழங்கப்பட உள்ளது. பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு மட்டும், ரூ. 491 கோடி வழங்கப்பட உள்ளது. இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ. 327 கோடி கிடைக்கும்.
தற்போது, 'பிபா' புதிய அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, அமெரிக்காவில் நடக்கும் 'சூப்பர் பவுல்' போட்டிகளில் தரப்படுவதைப் போல, பைனலில் வெற்றி பெறும் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 30 பேருக்கு, ஸ்பெஷலாக மோதிரம் வழங்க உள்ளது.
இதன்படி, விலை உயர்ந்த ரத்தின கற்கள், 18 காரட் தங்கம், வைரம், மாணிக்கம், நீல நிற கற்கள் இதில் பதிக்கப்பட வாய்ப்புள்ளது. உலக கோப்பை வடிவம், வெற்றி பெற்ற அணியின் பெயர் இதில் இருக்கும். ஒரு மோதிரத்தின் மதிப்பு ரூ. 1.44 கோடி.
மொத்தம் 2,026 மோதிரங்கள் 'ஸ்பெஷலாக' தயாரிக்கப்படுகின்றன. போட்டி முடிந்ததும் வெற்றி பெற்ற அணி கேப்டன், பயிற்சியாளருக்கு தற்காலிக மோதிரம் வழங்கப்படும். பின் ஒவ்வொரு வீரர்களின் விரல் அளவுக்கு ஏற்ப, தயாரிக்கப்பட்ட மோதிரங்கள் தரப்பட உள்ளன. மீதமுள்ள 1,996 மோதிரங்கள் பொது மக்களுக்கு விற்கப்பட உள்ளன.
