'ஹாட்ரிக்' நாயகன் ஹர்ஸ்ட் * உலக கால்பந்து கவுன்ட் டவுண் 18
'ஹாட்ரிக்' நாயகன் ஹர்ஸ்ட் * உலக கால்பந்து கவுன்ட் டவுண் 18
ADDED : மே 25, 2026 11:26 PM

இங்கிலாந்தில், 1966ல் (ஜூலை 11-30) உலக கோப்பை கால்பந்து 8வது சீசன் நடந்தது. 16 அணிகள் பங்கேற்றன. ஆசியா சார்பில் வட கொரியா அறிமுகமானது. ஆசிய அல்லது ஓசியானா மண்டலத்தில் வெற்றி பெறும் அணிகளை வீழ்த்தினால் மட்டுமே ஆப்ரிக்க நாடுகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற புதிய விதியை 'பிபா' அறிமுகப்படுத்தியது. இதனை ஏற்க மறுத்த 16 ஆப்ரிக்க நாடுகள் தொடரை புறக்கணித்தன.
பீலே பரிதாபம்
முதல் சுற்றுப் போட்டியில் பிரேசிலின் நட்சத்திர வீரர் பீலேவை மற்ற அணிகள் குறி வைக்க, முதல் போட்டியுடன் காயமடைந்து வெளியேறினார். ஹங்கேரி, போர்ச்சுகலுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்த பிரேசில், காலிறுதிக்கு கூட முன்னேறவில்லை.
இங்கிலாந்து அபாரம்
சொந்த மண்ணில் இங்கிலாந்து அசத்தியது. காலிறுதியில் அர்ஜென்டினா, அரையிறுதியில் போர்ச்சுகல் அணிகளை வீழ்த்தியது.
பைனலில் இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலையில் இருந்தன. பின் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. முதல் பாதியில் ஒரு கோல் அடித்திருந்த இங்கிலாந்து வீரர் ஜெப் ஹர்ஸ்ட், கூடுதல் நேரத்தில் 2 கோல் அடித்தார். உலக கோப்பை பைனலில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.
முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
'எக்ஸ்டிரா டைம்'
பைனலில் (1966), இங்கிலாந்து வீரர் ஜெப் ஹர்ஸ்ட் அடித்த பந்து, கோல் போஸ்ட் 'பாரில்' பட்டு உள்ளே சென்றது. அப்போது பந்து, கோல் லைனை கடந்து சென்றதா என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. நடுவர் காட்பிரைட் டியன்ஸ்ட், கோல் என அறிவித்தார். இவரது தீர்ப்பு, இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது.
