போதும்... போதும் 'லிஸ்ட்' பெருசா போகுது... * அடிச்சு துாக்கும் அரசியல் ஆட்டம்
போதும்... போதும் 'லிஸ்ட்' பெருசா போகுது... * அடிச்சு துாக்கும் அரசியல் ஆட்டம்
ADDED : ஜூலை 08, 2026 11:17 PM

சியாட்டில்: உலக கோப்பை தொடரில் இம்முறை அரசியல் தலையீடு நீண்டு கொண்டே செல்கிறது. அமெரிக்க மண்ணில் ஈரான் அணிக்கு விதித்த கட்டுப்பாடு, அதிபர் டிரம்ப் பேசியதால் அமெரிக்க வீரருக்கு 'ரெட் கார்டு' தடை ரத்து, பிரான்ஸ் கேப்டன் எம்பாப்வேயை, பராகுவே நாட்டின் 'செனட்' உறுப்பினர் இனரீதியாக விமர்சித்தது என பல சர்ச்சைகள் வெடித்துள்ளன.
முசோலினி காலம்
உலக கோப்பை அரங்கில் அரசியல் 'நாடகங்கள்' அரங்கேறுவது சகஜம். 1934ல் இத்தாலியில் நடந்த தொடரில் சர்வாதிகாரி முசோலினி ஆதிக்கம் செலுத்தினார். நடுவர்களை மிரட்டியது, லஞ்சம் கொடுத்தது என பல புகார்கள் கிளம்பின. முசோலினி 'முயற்சியில்' இத்தாலி அணி கோப்பை வென்றது.
அடுத்து, 1938ல் பிரான்சில் நடந்த உலக கோப்பை பைனலில் இத்தாலி, ஹங்கேரி மோதின. இப்போட்டிக்கு முன் இத்தாலி வீரர்களுக்கு முசோலினி அனுப்பிய செய்தியில் 'வெல்லுங்கள் அல்லது மரணம் அடையுங்கள்' என குறிப்பிட்டிருந்தாராம். மரண பயத்தில் ஆடிய இத்தாலி அணியினர், 4-2 என வென்று மீண்டும் கோப்பை வென்றனர். அப்போது ஹங்கேரி கோல்கீப்பர் அன்டல் ஜாபோ,''இத்தாலி வீரர்களை நான்கு கோல் அடிக்க அனுமதித்துவிட்டேன்; ஆனாலும் அவர்களது உயிரை காப்பாற்றியிருக்கிறேன்,' என குறிப்பிட்டுள்ளார்.
தவித்த ஈரான்
இம்முறை போர் காரணமாக ஈரான் அணியினரை, அமெரிக்காவில் தங்க அனுமதிக்கவில்லை. இதனால் பயிற்சி முகாமை மெக்சிகோவின் டிஜூவானா நகருக்கு மாற்றினர். அங்கிருந்து அமெரிக்கா வந்து போட்டிகளில் பங்கேற்றனர். போட்டி முடிந்ததும் உடனே மெக்சிகோ திரும்பினர். விசா, போக்குவரத்து பிரச்னையால் ஏற்பட்ட சோர்வை கடந்து, லீக் சுற்றில், பெல்ஜியும் உட்பட 3 போட்டிகளையும் 'டிரா' செய்தது. 'நாக்-அவுட்' வாய்ப்பை இழந்தது. அப்போது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலர் மார்க்வெய்ன் முல்லின் கூறுகையில்,''ஈரான் அணி வெளியேறியது மகிழ்ச்சி. இதை நினைத்து பாடலாம், நடனமாடி கொண்டாடலாம்,''என்றார்.
டிரம்ப் அதிரடி
மறுபக்கம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வலிமையை காட்டினார். போஸ்னியாவுக்கு எதிராக முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்க வீரர் பாலோகனுக்கு 'ரெட் கார்டு' காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.
பெல்ஜியத்திற்கு எதிரான 'ரவுண்ட்-16' போட்டியில் விளையாட முடியாது. உடனே சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தலைவர் இன்பான்டினோவை தொடர்பு கொண்டு, தடையை ரத்து செய்ய சொன்னார் டிரம்ப். அவரது கட்டளையை ஏற்று, பாலோகனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டது. பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் பங்கேற்றார். ஆனாலும், பெரிதாக சோபிக்க முடியவில்லை. பெல்ஜியம் அணி எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் அமெரிக்கா வெளியேறியது.
சரியான பதிலடி
இதை பெல்ஜியம், ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொண்டாடுகின்றன. 'வாங்க இப்போது ஒன்றாக நடனமாடுவோம்' என முல்லின் கருத்துக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. பெல்ஜியத்திற்கு எதிராக ஈரான் 0-0 என 'டிரா' செய்ததையும், அமெரிக்கா 1-4 என தோற்றதையும் சமூகவலைளத்தில் பதிவு செய்துள்ளது.
எம்பாப்வே மீது பாய்ச்சல்
உலக கோப்பை 'ரவுண்ட்-16' போட்டியில் கேப்டன் எம்பாப்வே ஒரு கோல் அடிக்க, பிரான்ஸ் அணி, பராகுவேயை 1-0 என வீழ்த்தியது. இதனால் ஆத்திரமடைந்த பராகுவே நாட்டின் பெண் 'செனட்' உறுப்பினர் செலஸ்டி அமரில்லா, இனரீதியாக எம்பாப்வேயை விமர்சித்தார். 'எம்பாப்வே உண்மையில் பிரான்சை சேர்ந்தவர் அல்ல. 'காலனிய' கேமரூன் நாட்டை சேர்ந்தவர். பிரெஞ்ச் நபர் போல் நடிக்கிறார். பொறாமை கொண்டவர். புது பணக்காரர், கர்வம் கொண்டவர், அசிங்கமானவர்,' என வசை பாடினார்.
இதற்கு எம்பாப்வே,'நீங்கள் இழிவான பெண். அரசியல் பொறுப்பு வகிக்க தகுதியற்றவர். இனரீதியில் விமர்சிக்கும் உங்களது செயல், பராகுவே நாட்டின் 'இமேஜிற்கு' பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது,' என பதிலடி கொடுத்தார். உடனே எம்பாப்வே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென அமரில்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
பராகுவே அரசு வெளியிட்ட செய்தியில்,''இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. எம்பாப்வே தொடர்பாக அமரில்லா கூறியது, அவரது சொந்த கருத்து. இது அரசு, பராகுவே மக்களின் கருத்து அல்ல,' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
'பிபா' தலைவர் இன்பான்டினோவும் அமரில்லாவின் இனரீதியான கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
