/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
சர்ச்சை கோல்... இந்தியா சோகம் * 'உலக' வாய்ப்பு நழுவியது
/
சர்ச்சை கோல்... இந்தியா சோகம் * 'உலக' வாய்ப்பு நழுவியது
சர்ச்சை கோல்... இந்தியா சோகம் * 'உலக' வாய்ப்பு நழுவியது
சர்ச்சை கோல்... இந்தியா சோகம் * 'உலக' வாய்ப்பு நழுவியது
ADDED : ஜூன் 12, 2024 11:19 PM

தோஹா: கத்தார் போட்டியில் சர்ச்சைக்குரிய கோல் வழங்கப்பட்டது குறித்து இந்தியா சார்பில் புகார் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்று போட்டி நடந்தன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, 5 போட்டியில் 1 வெற்றி, 2 தோல்வி, 2 'டிரா' என 5 புள்ளி பெற்று, இரண்டாவது இடத்தில் இருந்தது.
தோஹாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியா ('நம்பர்-121'), கத்தார் ('நம்பர்-34') அணிகள் மோதின. இதில் வென்றால் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது. 37வது நிமிடத்தில் சாங்டே கோல் அடித்தார். போட்டியின் 72வது நிமிடம் வரை இந்தியா முன்னிலையில் இருந்தது.
73வது நிமிடம் கத்தார் அணிக்கு 'பிரீகிக்' கிடைத்தது. இதில் கத்தார் வீரர்கள் அடித்த பந்தை பாய்ந்து தடுத்தார் இந்திய கோல்கீப்பர், கேப்டன் குர்பிரீத் சிங் சாந்து. பந்து இவரது கையில் இருந்து நழுவி, கோல் போஸ்டுக்கு அருகில் வெளியே சென்றது. கோட்டை விட்டு வெளியே சென்ற பந்தை மீண்டும் கத்தாரின் ஹுசெய்ன் மைதானத்திற்குள் கொண்டு வர, அருகில் இருந்த ஏமென், வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.
இதை எதிர்த்து இந்திய வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தும், அவர் கண்டுகொள்ளவில்லை. 'வீடியோ ரெபரல்' ('வி.ஏ.ஆர்') முறை பயன்படுத்தப்படாததும் இந்தியாவுக்கு பின்னடைவு ஆனது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அல்ராவி (85வது) ஒரு கோல் அடித்தார். இந்தியா 1-2 என தோற்றது. உலக கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முதன் முறையாக முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா.
இதுகுறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் ('பிபா') முறைப்படி புகார் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கலைந்த கனவு
இந்திய அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில்,''இந்தியாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கால்பந்தில் இதுபோல நடக்கக் கூடாது. ஏனெனில் சர்ச்சைக்குரிய ஒரு கோல் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் மாற்றி விட்டது. மூன்றாவது சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு கொல்லப்பட்டுவிட்டது,'' என்றார்.