ADDED : மார் 05, 2024 09:51 PM

லலித்புர்: தெற்காசிய கால்பந்து இரண்டாவது போட்டியில் இந்திய பெண்கள் அணி 1-3 என வங்கதேசத்திடம் வீழ்ந்தது.
நேபாளத்தில் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் ( 16 வயதுக்குட்பட்ட) தொடர் 6வது சீசன் நடக்கிறது. இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேச அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் பூடானை 7-0 என வென்றது இந்தியா. நேற்று தனது இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது.
போட்டியின் 9 வது நிமிடம் வங்கதேசத்தின் அல்பி அக்தர் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 0-1 என பின்தங்கியது. இரண்டாவது பாதியில் 55 வது நிமிடம் இந்தியாவின் அனுஷ்கா குமாரி ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. அடுத்து 78 வது நிமிடம் பிரித்தி, 89 வது நிமிடம் அர்பிதா என இருவரும் வங்கதேச அணிக்கு கோல் அடித்து கைகொடுத்தனர்.
முடிவில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் 3 புள்ளியுடன் இரண்டாவதாக உள்ள இந்தியா, நாளை நேபாளத்தை (3 புள்ளி) சந்திக்கிறது. இதில் வென்றால் பைனலுக்கு செல்லலாம்.

