/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
சுனில் செத்ரி 'குட்-பை' * சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து... * இந்தியா-குவைத் போட்டி 'டிரா'
/
சுனில் செத்ரி 'குட்-பை' * சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து... * இந்தியா-குவைத் போட்டி 'டிரா'
சுனில் செத்ரி 'குட்-பை' * சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து... * இந்தியா-குவைத் போட்டி 'டிரா'
சுனில் செத்ரி 'குட்-பை' * சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து... * இந்தியா-குவைத் போட்டி 'டிரா'
ADDED : ஜூன் 07, 2024 12:20 AM

கோல்கட்டா: சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து விடைபெற்றார் இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி. குவைத்துக்கு எதிரான கடைசி போட்டி நேற்று 'டிரா' ஆனது.
உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. உலகத் தரவரிசையில் 121 வது இடத்தில் உள்ள இந்திய அணி, நேற்று தனது ஐந்தாவது போட்டியில், 139 வது இடத்தில் உள்ள குவைத்தை எதிர்கொண்டது.
இதில் வென்றால் உலக கோப்பை கால்பந்து, மூன்றாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யலாம் என்ற நிலையில் களமிறங்கியது. தவிர இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரியின் கடைசி போட்டியாக இருந்தது. போட்டியின் 3வது நிமிடத்தில் குவைத் வீரர் முகமது அப்துல்லா அடித்த பந்தை, கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து முன்னோக்கி வேகமாக வந்து தடுக்க, இந்திய அணி அபாயத்தில் இருந்து தப்பியது. முதல் பாதி 0-0 என சமனில் இருந்தது.
இரண்டாவது பாதியில் 51வது நிமிடம் இந்தியாவின் ரஹிம் அலி அடித்த பந்து கோல் போஸ்டுக்கு வெளியே செல்ல, வாய்ப்பு நழுவியது. முடிவில் போட்டி கோல் எதுவும் இல்லாமல் (0-0) 'டிரா' ஆனது.
19 ஆண்டு, 151 போட்டி, 94 கோல்
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி 39. கடந்த 2005ல் அறிமுகம் ஆனார். 19 ஆண்டுகால கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் பங்கேற்ற, அதிக கோல் அடித்த இந்திய வீரர் ஆனார். இவர் 151 போட்டியில் 94 கோல் அடித்தார். சக வீரர்கள் 18 கோல் அடிக்க உதவினார்.
* தற்போதுள்ள வீரர்களில் அதிக கோல் அடித்தவர்களில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (206 போட்டி, 128 கோல்), அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கு (180ல் 106) அடுத்து, மூன்றாவதாக இருந்தார்.
* சர்வதேச போட்டியில் 'ஹாட்ரிக்' கோல் அடித்த ஒரே இந்திய வீரர்.
* சர்வதேச தொடரில் 11 முறை இந்தியாவுக்கு கோப்பை வென்று தந்துள்ளார்.
கண்ணீருடன்...
நேற்று போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என இணைந்து இருபுறமும் அணிவகுத்து நின்று சுனில் செத்ரிக்கு கவுரவம் கொடுத்தனர். சக வீரர்கள், ரசிகர்களிடம் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார்.