sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

கால்பந்து உலகம் போற்றும் போப் பிரான்சிஸ்.... * சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

/

கால்பந்து உலகம் போற்றும் போப் பிரான்சிஸ்.... * சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

கால்பந்து உலகம் போற்றும் போப் பிரான்சிஸ்.... * சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

கால்பந்து உலகம் போற்றும் போப் பிரான்சிஸ்.... * சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்


ADDED : ஏப் 22, 2025 11:46 PM

Google News

ADDED : ஏப் 22, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பியுனஸ் ஏர்ஸ்: 'உலகின் அழகான விளையாட்டு' என வர்ணிக்கப்படும் கால்பந்து மீது ஆர்வமாக இருந்தார் போப் பிரான்சிஸ். இவரது மறைவுக்கு மெஸ்சி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உலக கத்தாலிக்க கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான போப் பிரான்சிஸ் 88, நேற்று முன் தினம் காலமானார். அர்ஜென்டினாவில் பிறந்த இவர், இளம் பருவத்தில் கால்பந்தாட்ட பிரியராக இருந்தார். தலைநகர் பியுனஸ் ஏர்ஸ் அருகில் உள்ள தனது சொந்த ஊரான புளோரசில், நண்பர்களுடன் சேர்ந்து தெருக்களில் தினமும் பல மணி நேரம் கால்பந்து விளையாடுவார். 1908ல் 'சான் லாரன்சோ கால்பந்து' கிளப்பில் வாழ்நாள் உறுப்பினராக சேர்ந்தார். இவரது உறுப்பினர் எண்: 88,235. கிளப்பிற்கான சந்தாவை கடைசி வரை செலுத்தினார்.

மூன்று உலக கோப்பை

சிறுவனாக இருந்த போது, சான் லாரன்சோ அணியின் ஆட்டத்தை பார்த்து வியந்தார். 1946ல் லாரன்சோ அணி, உள்ளூர் தொடரில் கோப்பை வென்றது. இதில் இடம் பெற்றிருந்த வீரர்களின் பெயரை தனது கடைசி மூச்சு வரை நினைவில் வைத்திருந்தார்.

கடந்த 2013ல் போப் ஆக பதவியேற்றார் பிரான்சிஸ். 2014ல் தென் அமெரிக்காவுக்கான 'கோபா' கோப்பையை லாரன்சோ அணி வென்றது. அப்போது கிளப்பின் இயக்குநர்கள், கோப்பையை வாட்டிகன் எடுத்து வந்தனர். அதை பார்த்த பிரான்சிஸ் மகிழ்ச்சி அடைந்தார்.

போப் பிரான்சிஸ் வாழ்ந்த காலத்தில், அர்ஜென்டினா அணி 3 உலக கோப்பை வென்றது. இவரது 41 வயதில், 1978ல் முதல் உலக கோப்பை வென்றது. 48 வயதில், 1986ல் மாரடோனா தலைமையில் 2வது கோப்பை வென்றது. போப் ஆன பின், 2022ல் மெஸ்சி தலைமையில் 3வது உலக கோப்பை வென்றது.

உலக ஒற்றுமை

போப் பிரான்சிஸ் ஒரு முறை கூறுகையில்,''கால்பந்து என்பது அணி விளையாட்டு. இதில் தனிநபர் மட்டும் உற்சாகமாக இருக்க முடியாது. இது போல ஒற்றுமையாக வாழ்ந்தால், மனதுக்கும் இதயத்திற்கும் நல்லது. வீரர்கள் கடந்து வந்த பாதையை மறக்க கூடாது. வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் சிறந்த மனிதராக இருப்பது முக்கியம்,''என்றார்.

உலகில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வலிமை விளையாட்டுக்கு உண்டு என நம்பினார் போப் பிரான்சிஸ். பாரிஸ் ஒலிம்பிக் (2024) போட்டியின் போது இவர் வெளியிட்ட செய்தியில்,'விளையாட்டு என்பது தனிநபர் திறமையை வெளிப்படுத்தும் களம் மட்டுமல்ல. இது சிறந்த சமூகத்தை வடிவமைக்க உதவும் கருவி. உலகில் சகோதரத்துவத்தின் மதிப்பை கற்றுக்கொடுக்கும் சக்தி பெற்றது,' என குறிப்பிட்டார்.

சிறந்த வீரர் பீலே

இத்தாலி 'டிவி' ஒன்றுக்கு 2023ல் பேட்டி அளித்தார் போப் பிரான்சிஸ். அப்போது, அனைத்து காலத்திற்கும் சிறந்த கால்பந்து வீரர் மாரடோனாவா அல்லது மெஸ்சியா என கேட்டனர். அதற்கு,'மூன்றாவதாக ஒருவர் பெயரை சேர்க்கிறேன்...அவர் தான் பீலே' என சற்றும் எதிர்பாராத பதிலை தந்தார். மூவரில் சிறந்த வீரர் பீலே தான் என சூசகமாக கூறினார். போப் ஆவதற்கு முன் பிரேசில் ஜாம்பவான் பீலேவை சந்தித்தார். போப் ஆன பின், வாட்டிகனில் மாரடோனா, மெஸ்சியை சந்தித்தார்.

போதை மருந்து பயன்படுத்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாரடோனா 2020ல் காலமானார். இவரை பற்றி போப் பிரான்சிஸ் கூறுகையில்,''மாரடோனா சிறந்த கால்பந்து வீரர். ஆனால் ஒரு மனிதராக வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டார்,''என்றார்.

மெஸ்சி பற்றி கூறுகையில்,''எதிலும் சரியாக நடந்து கொள்ளும் ஜென்டில்மேன்'' என்றார்.

'டிவி' பார்ப்பது இல்லை

கால்பந்து மீது ஆர்வம் கொண்ட போப் பிரான்சிஸ், 1990ல் இருந்து 'டிவி'யில் போட்டிகளை பார்ப்பதில்லை. வானொலி மூலம் போட்டி விபரங்களை கேட்பார். வாட்டிக்கனில் பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் சான் லாரன்சோ, அர்ஜென்டினா அணி பங்கேற்கும் போட்டிகளின் முடிவுகளை கூறுவர். இவர்கள் மூலம் தான் 2022ல் அர்ஜென்டினா அணி உலக கோப்பை வென்றதையும் தெரிந்து கொண்டார்.

போட்டி ஒத்திவைப்பு

போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இத்தாலி சீரீ 'ஏ', அர்ஜென்டினாவில் முக்கிய கால்பந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இரங்கல்

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தலைவர் கியானி இன்பான்டினோ கூறுகையில்,''சமுதாய ஒற்றுமையில் கால்பந்து விளையாட்டுக்கு உள்ள பங்கு பற்றி அடிக்கடி கூறுவார் போப் பிரான்சிஸ். ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் இவருக்காக பிரார்த்திக்கிறது,''என்றார்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் கூறுகையில்,''ஒலிம்பிக் மூலம் உலகில் அமைதி, ஒற்றுமை ஏற்பட ஆதரவு அளித்தார் போப் பிரான்சிஸ். ஒலிம்பிக் இயக்கம் சிறந்த நண்பரை இழந்துவிட்டது,''என்றார்.

'மிஸ்' செய்வோம்

மெஸ்சி வெளியிட்ட செய்தியில்,''அர்ஜென்டினாவுக்கு நெருக்கமானவராக இருந்தார் போப் பிரான்சிஸ். இந்த உலகை சிறந்த இடமாக மாற்றியதற்கு நன்றி. உங்களை 'மிஸ்' செய்வோம்,' என குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us