/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ரோனால்டோ புறக்கணிப்பு * ரசிகர்கள் கோபம்
/
ரோனால்டோ புறக்கணிப்பு * ரசிகர்கள் கோபம்
ADDED : நவ 20, 2025 11:02 PM

புதுடில்லி: ரொனால்டோ படம் இல்லாமல் உலக கோப்பை கால்பந்து 'போஸ்டர்' வெளியானது, ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. முதன் முறையாக இதில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதுவரை 42 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இத்தொடருக்கான அட்டவணை வரும் டிசம்பர் 5ல் வெளியாக உள்ளது.
இதனிடையே சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், ''42 நாடுகள்... ஒரு கனவு' என்ற தலைப்பில் சிறப்பு 'போஸ்டர்' வெளியானது. இதுவரை தகுதி பெற்ற அணிகளின் முன்னணி வீரர்கள் போட்டோ இதில் இடம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி, எகிப்தின் முகமது சலா, நார்வேயின் எர்லிங் ஹாலண்ட், பிரான்சின் எம்பாப்வே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ, இதில் சேர்க்கப்படவில்லை. மாறாக இந்த அணியின் புருனோ பெர்ணான்டஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு உலக கால்பந்து ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலக கால்பந்தில் அதிக கோல் (143) அடித்து, ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்று வரலாறு படைக்க இருக்கும், உலகின் முன்னணி வீரரை எப்படி புறக்கணிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
காரணம் என்ன
அயர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டியில், ரொனால்டோவுக்கு 'ரெட் கார்டு' காட்டப்பட்டது. இதனால், ஆர்மேனியாவுக்கு எதிராக, ரொனால்டோ விளையாடவில்லை. ஒருவேளை, இவருக்கு மூன்று போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டால், உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் முதல் இரு போட்டியில் பங்கேற்க முடியாது. இதனால் போஸ்டரில் ரொனால்டோவை 'பிபா' புறக்கணித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

