/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்திய கால்பந்து 'சிஸ்டம்' சரியில்லை * பாய்ச்சங் பூட்டியா ஆவேசம்
/
இந்திய கால்பந்து 'சிஸ்டம்' சரியில்லை * பாய்ச்சங் பூட்டியா ஆவேசம்
இந்திய கால்பந்து 'சிஸ்டம்' சரியில்லை * பாய்ச்சங் பூட்டியா ஆவேசம்
இந்திய கால்பந்து 'சிஸ்டம்' சரியில்லை * பாய்ச்சங் பூட்டியா ஆவேசம்
ADDED : ஜூன் 11, 2025 11:03 PM

கோல்கட்டா: ''இந்திய கால்பந்து கூட்டமைப்பின் 'சிஸ்டம்' சரியில்லை. இது இந்திய கால்பந்தை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்கிறது,'' என பாய்ச்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.
இந்திய கால்பந்து அணி 1948 முதல் 1960 வரை என தொடர்ந்து நான்கு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றது. ஒருமுறை கூட உலக கோப்பை தொடரில் பங்கேற்றது இல்லை. 1950ல் பிரேசில், உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது. ஆனால் 1951ல் டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டுக்கு முன்னுரிமை தந்து, உலக தொடரை புறக்கணித்து, தவறு செய்தனர்.
தொடரும் தோல்வி
கடந்த ஆண்டு இந்திய அணி, தரவரிசையில் தன்னை விட 41 இடம் பின் தங்கி இருந்த ஆப்கானிஸ்தானிடம் தோற்று, உலக கோப்பைக்கான மூன்றாவது தகுதிச்சுற்று வாய்ப்பை இழந்தது. இதனால் இகோர் ஸ்டிமாக் நீக்கப்பட்டு, மனோலா மார்கஸ் புதிய பயிற்சியாளர் ஆனார். ஆனால் தோல்வி தொடர்கிறது.
ஆசிய கோப்பைக்கு 3வது கட்ட தகுதிச்சுற்றில் 185 வது இடத்தில் இருந்த வங்கதேசத்திடம் 'டிரா', 153 வது இடத்தில் இருந்த ஹாங்காங்கிடம் தோல்வி என சறுக்கியது. இதனால் கடந்த 2018ல் 97 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 133வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
பூட்டியா ஆவேசம்
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா 48, கூறியது:
இந்திய கால்பந்தின் நிலையை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது. உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் போன்ற அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறுகின்றன. ஆனால் 'ரெகுலராக' விளையாடிய ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறவே, இப்போது திணறுகிறோம். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) தலைவர் கல்யாண் துபே, இந்திய கால்பந்தை முற்றிலும் அழித்து விட்டார். இவர், உடனடியாக பதவி விலக வேண்டும். ஊழல் புகார், சர்ச்சை நிறைந்த, ஒட்டுமொத்த அமைப்பையும் கலைக்க வேண்டும். ஐ.எஸ்.எல்., தொடரில் கோவா அணி பயிற்சியாளராக உள்ள மனோலா மார்கசை, தானாக முடிவு செய்து இந்திய அணி பயிற்சியாளராக நியமித்தார் கல்யாண் துபே.
ஓய்வு பெற்ற சுனில் செத்ரியை மீண்டும் விளையாட அழைத்தனர். இது மோசமான முடிவு. இதனால் ஒரு மாற்றமும் நிகழவில்லை. இந்திய கால்பந்தின் 'சிஸ்டம்' சரியில்லை. எவ்வித தெளிவான திட்டமிடலும் இல்லை. நிர்வாகத்தின் குளறுபடிகள் காரணமாக, இந்திய அணி போட்டியில் பாதிப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ. 2,500 தான்
பூட்டியா கூறுகையில்,'' இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உள்ளது போல சம்பள ஒப்பந்தம் ('ஏ+ கிரேடு' வீரருக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி) இந்திய கால்பந்து வீரர்களுக்கு இல்லை. நாள் கணக்கில் தான் சம்பளம் கிடைக்கிறது. தினசரி படி ரூ. 2,500 கூட சரியாக கொடுக்கப்படுவதில்லை. ஆனால் திடீரென ஹாங்காங் போட்டியில் வென்றால் ரூ. 42 லட்சம் பரிசு என அறிவிக்கின்றனர். இவை எங்கிருந்து வந்தது. ஒருவேளை வென்றால், அடுத்த 4 போட்டிக்கு இதுபோல தருவார்களா,'' என்றார்.