
புதுடில்லி: அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. இதையடுத்து, இந்தியாவில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி பங்கேற்கும் 'நட்பு' போட்டிக்கு, கேரளா மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா பங்கேற்க இருந்தது. கடைசியில் இப்போட்டி ரத்தானது.
இருப்பினும் வரும் டிசம்பர் மாதம் மெஸ்ஸி, இந்தியா வருகிறார். இதன் படி டிசம்பர் 13ல் முதலில் கோல்கட்டா, அன்று மாலை ஐதராபாத் செல்கிறார். இங்கு கண்காட்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர பாராட்டு விழா, இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
மறுநாள் டிசம்பர் 14ல் மும்பை செல்கிறார். மூன்றாவது நாள் டில்லி (டிச. 15) நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது பிரதமர் மோடியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மெஸ்ஸி வெளியிட்ட செய்தியில்,'' இந்திய மக்களின் அன்புக்கு நன்றி. எனது பயணம் அடுத்த வாரம் துவங்குகிறது. கோல்கட்டா, மும்பை, டில்லியுடன் தற்போது ஐதராபாத்தும் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. விரைவில் சந்திப்போம்,'' என தெரிவித்துள்ளார்.

