/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கன்னத்தில் 'பளார்' * வீரருக்கு 'ரெட் கார்டு
/
கன்னத்தில் 'பளார்' * வீரருக்கு 'ரெட் கார்டு
ADDED : நவ 25, 2025 11:14 PM

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. ஓல்டு டிரபோர்டில் நடந்த லீக் போட்டியில் எவர்டன், மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. போட்டியின் 13 வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் புருனோ அடித்த பந்தை திருப்பி அனுப்பியது தொடர்பாக, எவர்டன் வீரர்கள் இட்ரிஸ்சா, மைக்கேல் கியான் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென, கியான் கன்னத்தில் அறைந்தார் இட்ரிஸ்சா.
இதைப் பார்த்த நடுவர் டோனி ஹாரிங்டன், உடனடியாக இட்ரிஸ்சாவுக்கு 'ரெட் கார்டு' கொடுத்தார். இருப்பினும் தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபட்ட இட்ரிஸ்சாவை, அவரது அணி கோல் கீப்பர் ஜோர்டான், இல்லிமன் வெளியேற்றினர். இப்போட்டியில் டியூஸ்பர்ரி ஹால் (29 வது நிமிடம்) அடித்த கோல் கைகொடுக்க, எவர்டன் அணி 1-0 என வெற்றி பெற்றது.
'பெட்' கட்ட மாட்டேன்
லண்டன்: செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 38. ஆஸ்திரேலிய ஓபன் (10), பிரெஞ்ச் ஓபன் (3), விம்பிள்டன் (7), யு.எஸ்.ஓபன் (4) என கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 24 பட்டம் வென்றவர். இவர் 25 வது பட்டம் வெல்வாரா என, முன்னாள் வீரர் போரிஸ் பெக்கரிடம் (ஜெர்மனி) கேட்கப்பட்டது. இதற்கு அவர், ''கடந்த 20 ஆண்டுகளில் ஜோகோவிச்சிற்கு எதிராக பந்தயம் ('பெட்') கட்டியவர்கள் நிறைய பணத்தை இழந்துள்ளனர். இதனால், ஒருபோதும் அவருக்கு எதிராக 'பெட்' கட்ட மாட்டேன்,'' என்றார்.
கால்பந்து: லாட்வியா வெற்றி
பெண்களுக்கான (19 வயதுக்கு உட்பட்ட) யூரோ கோப்பை கால்பந்து தொடர் 2026, ஜூன் 27-ஜூலை 10ல் போஸ்னியாவில் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதன் 'பி 6' பிரிவில் நடந்த லீக் போட்டியில் லாட்வியா அணி, 5-1 என்ற கோல் கணக்கில் மால்டா அணியை வென்றது. 'பி 5' பிரிவில் நடந்த போட்டியில் வடக்கு மாசிடோனியா அணி 3-0 என ஜார்ஜியாவை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* உலக டென்னிஸ் தரவரிசையில் 3 இடம் முன்னேறிய இந்தியாவின் சஹாஜா, 307 வது இடத்தில் உள்ளார். 8 இடம் பின் தங்கிய ராஷ்மிகா, 394வது இடம் பிடித்தார்.
* இந்தியாவின் கோவாவில் உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ரஷ்யாவின் எசிபென்கோ, உஸ்பெகிஸ்தானின் நாடிர் பெக் மோதினர். இதில் எசிபென்கோ 2.0-0 என வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றினார். உலக சாம்பியன்ஷிப் தகுதி போட்டியான 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.
* வரும் 2026ல் இந்தியாவில் நடக்கவுள்ள தடகள போட்டி விபரங்களை இந்திய தடகள கூட்டமைப்பு வெளியிட்டது. இதன்படி, இம்முறை கூடுதலாக 8 சேர்த்து, மொத்தம் 40 போட்டிகள் நடக்கவுள்ளன. தவிர இந்தியாவில் நடக்கும் கண்டங்களுக்கு இடையிலான போட்டியின் அந்தஸ்து ('சில்வர் லெவல்') உயர்த்தப்பட்டுள்ளது.
* முத்தரப்பு தொடரில் (19 வயது, ஒருநாள்) நேற்று பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் இந்திய 'பி' அணி (206/8), 2 விக்கெட்டில் ஆப்கானிஸ்தானை (202/9) வீழ்த்தியது.
* இந்தியாவில் 2023ல் ஆமதாபாத் நகரத்தில் காமன்வெல்த் விளையாட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதற்கான முறையான அனுமதி இன்று கிடைக்கவுள்ளது.
* ஆமதாபாத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து (17 வயதுக்கு உட்பட்ட) தொடருக்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி, சீன தைபேவை எதிர்கொள்கிறது.
* போபாலில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் மணிஷ் சுரேஷ்குமார், அபினவ் சண்முகம், நிதின் குமார் சின்ஹா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

