/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்திய கால்பந்தின் இதயத்துடிப்பு செத்ரி... * ஓய்வு பெற முடிவு
/
இந்திய கால்பந்தின் இதயத்துடிப்பு செத்ரி... * ஓய்வு பெற முடிவு
இந்திய கால்பந்தின் இதயத்துடிப்பு செத்ரி... * ஓய்வு பெற முடிவு
இந்திய கால்பந்தின் இதயத்துடிப்பு செத்ரி... * ஓய்வு பெற முடிவு
ADDED : மே 16, 2024 11:07 PM

புதுடில்லி: சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து விடைபெறுகிறார் கேப்டன் சுனில் செத்ரி.
இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரி 39. கடந்த 2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 19 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடிய இவர், ரசிகர்களின் இதயங்ககளை கவர்ந்தார்.
கடந்த மார்ச் மாதம் தனது 150வது போட்டியில் களமிறங்கிய சுனில் செத்ரி, இந்திய அணிக்காக அதிக போட்டியில் பங்கேற்ற வீரர் ஆனார். இந்தியாவுக்காக அதிக கோல் (94) அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில் குவைத் அணிக்கு எதிராக வரும் ஜூன் 6ல் பங்கேற்கிறார். கோல்கட்டா, சால்ட் லேக் மைதாவத்தில் நடக்கும் இப்போட்டியுடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற ள்ளார்.
இதுகுறித்து செத்ரி கூறுகையில்,''இந்திய அணிக்காக முதல் போட்டி விளையாடியது மறக்க முடியாத தருணம். 80 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தேன். இதை எப்போதும் மறக்க முடியாது.
கடந்த 19 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கையில் இந்தியாவுக்காக விளையாடியது, போட்டிகளில் சந்தித்த நெருக்கடி, மகிழ்ச்சி என அனைத்தும் கலந்து இருந்தது. ஒருபோதும் எனது தனிப்பட்ட சாதனையாக எடுத்துக் கொண்டதில்லை.
கடந்த ஒன்றரை மாதங்களாக ஒரு முடிவை நோக்கி சென்று கொண்டிருந்தேன். எனது கடைசி போட்டியில் விளையாட உள்ளேன். அடுத்த போட்டி தான் எனது கடைசி ஆட்டம் என்ற உள்ளுணர்வு வந்ததும், அதுகுறித்து அதிகம் யோசித்தேன். இதற்கு முன் நடந்தவைகளை மீண்டும் நினைத்து பார்க்கத் துவங்கியுள்ளேன்.
இது எனக்கு விசித்திரமாக உள்ளது. கால்பந்து, பயிற்சியாளர், சக வீரர்கள், விளையாடிய மைதானங்கள், சிறந்த போட்டி என அனைத்தும் கண்முன் வந்து செல்கின்றன,'' என்றார்.
பயோ டேட்டா
பெயர்: சுனில் செத்ரி
பிறப்பு: 3. 8. 1984
இடம்: செகந்திராபாத், தெலுங்கானா
விளையாட்டு: கால்பந்து, முன்கள வீரர்
போட்டி: 150
கோல்: 94
சிறந்த வீரர்
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு வழங்கிய, சிறந்த இந்திய வீரர் விருதை, 7 முறை (200, 2011, 2013, 2014, 2017, 2018, 2022) வென்றார்.
4
இந்திய அணிக்காக அதிக 'ஹாட்ரிக்' கோல் அடித்தவர் சுனில் செத்ரி (4).
* தெற்காசிய சாம்பியன்ஷிப் தொடரில் அதிக கோல் (23) அடித்துள்ளார்.
122
ஐ.எஸ்.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக அதிக போட்டியில் (276) விளையாடிய செத்ரி, 122 கோல் அடித்தார்.
முதல் கால்பந்து வீரர்
விளையாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருது (2021ல்) வென்ற முதல் இந்திய கால்பந்து வீரர் சுனில் செத்ரி. தவிர, 2011ல் அர்ஜுனா,
2019ல் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
அனுமதி மறுப்பு
சுனில் செத்ரி 2009ல் இங்கிலாந்தின் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்காக 3 ஆண்டு ஒப்பந்தம் ஆனார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க காத்திருந்தார். ஆனால் 'பிபா' தரவரிசையில் 'டாப்-70' பட்டியலில் இந்தியா இல்லாததால், சுனில் செத்ரி, இங்கிலாந்தில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.
கோப்பைகள் பல...
சுனில் செத்ரி இடம் பெற்ற இந்திய அணி, 2007, 2009, 2011ல் நேரு கோப்பை வென்றது. 2011, 2015, 2021ல் தெற்காசிய கோப்பை கைப்பற்றியது.
மூன்றாவது வீரர்
தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (206 போட்டி, 128 கோல்), அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கு (180ல் 106) அடுத்து, அதிக கோல் அடித்த வீரர்களில் மூன்றாவதாக உள்ளார் செத்ரி(94 கோல்).
பூட்டியா உதவி
சுனில் செத்ரியின் தந்தை கார்கா செத்ரி, இந்திய ராணுவத்தில் கால்பந்து விளையாடினார். அம்மா சுஷிலா நேபாளத்தை சேர்ந்தவர். அங்குள்ள தேசிய அணிக்காக விளையாடியுள்ளார். தந்தை, தாய் வரிசையில், துவக்கத்தில் கல்லுாரியில் சேர்ந்து படிப்பை தொடர்வதற்காக விளையாடத் துவங்கினார் சுனில் செத்ரி.
அப்போதைய கேப்டன் பாய்ச்சங் பூட்டியா, சுனில் செத்ரியின் துவக்க கால வளர்ச்சிக்கு கைகொடுத்தார். பின் முன்னணி வீரராக திகழ்ந்தார். களமிறங்கிய ஒவ்வொரு போட்டியிலும் சுனில் செத்ரி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆசிய கோப்பை, சாலஞ்ச் கோப்பை, உலக கோப்பை தகுதி, நட்பு போட்டிகளில் சிறப்பாக திறமை வெளிப்படுத்தினார்.
மறக்க முடியாத நாளாக...
* பாய்ச்சங் பூட்டியா, முன்னாள் கேப்டன்
சுனில் செத்ரி சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய கால்பந்தில் இவரது பங்கு வியக்கத்தக்கது. இவரது ஓய்வு, இந்திய கால்பந்துக்கு பெரிய இழப்பு. சீனியர் வீரராக அவருடன் விளையாடியது எனது அதிர்ஷ்டம்.
* ஸ்டிமாக், இந்திய பயிற்சியாளர்
இந்தியாவுக்காக மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார். எல்லோருக்கும் துாண்டுகோலாக உள்ளார். இளைஞர்கள் இவரை பின்பற்ற வேண்டும். ஜூன் 6ம் தேதியை அவருக்கும், இந்திய கால்பந்து ரசிகர்களுக்கும் மறக்க முடியாத நாளாக செய்ய வேண்டும்.
* குர்பிரீத் சிங் சாந்து, கோல்கீப்பர்
கால்பந்து அரங்கில் பெரும்பாலான போட்டிகளில் சுனில் செத்ரியுடன் விளையாடியுள்ளேன். இது எனது அதிர்ஷ்டம். 'சீனியர்' வீரராக, மூத்த சகோதரனாக, ஆலோசகராக என, அவரிடம் இருந்து அதிகம் கற்றுள்ளேன்.
* கோலி
எனது சகோதரர் சுனில் செத்ரி, பெருமையாக உள்ளது.
* யுவராஜ் சிங்
இந்திய கால்பந்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற உண்மையான ஜாம்பவான் சுனில் செத்ரி. கால்பந்து மீதான உங்களது 'காதல்', அடுத்த தலைமுறை வீரர்கள் கால்பந்து விளையாட்டை தேர்வு செய்ய துாண்டுகோலாக அமைந்தது. இந்திய விளையாட்டு அரங்கில் உங்களது ஆதிக்கம் என்றும் நினைவில் நிற்கும்.