ADDED : டிச 30, 2025 11:04 PM

கோல்கட்டா: ஐ.டபிள்யு.எல்., கால்பந்து தொடரில் கோல் மழை பொழிந்த ஈஸ்ட் பெங்கால் அணி 9-0 என்ற கணக்கில் சேசா அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் நடக்கிறது. ஈஸ்ட் பெங்கால், தமிழகத்தின் சேது (மதுரை), கோகுலம் கேரளா உட்பட மொத்தம் 8 கிளப் அணிகள் பங்கேற்கின்றன.
இதன் நான்காவது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.
மேற்கு வங்கத்தின் கல்யாணியில் நடந்த போட்டியில், ஈஸ்ட் பெங்கால், கோவாவின் சேசா அணிகள் மோதின. ஈஸ்ட் பெங்கால் அணியின் பஜிலா (9, 22, 25, 72வது நிமிடம்) நான்கு கோல் அடித்து அசத்தினார்.
மற்றொரு வீராங்கனை சவுமியா (6, 54, 86) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். ரேஸ்டி (40), சுலஞ்ஜனா (18) தங்கள் பங்கிற்கு தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில், ஈஸ்ட் பெங்கால் அணி 9-0 என வென்று, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
கோல்கட்டாவில் நடந்த போட்டியில் நீடா (ஒடிசா) அணி 1-0 என டில்லியின் கார்வல் யுனைடெட் அணியை சாய்த்தது. தமிழகத்தின் சேது அணி 4-2 என்ற கோல் கணக்கில், கோல்கட்டாவின் ஸ்ரீபூமி அணியை வென்றது. சேது வீராங்கனை லிண்டா கோம் (10, 18, 90+5) 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.

