UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 07:36 PM

அட்லாண்டா: மெஸ்ஸி 2 கோல் அடிக்க இன்டர் மயாமி அணி 3-1 என, அட்லாண்டா யுனைடெட் அணியை வீழ்த்தியது.
அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. அட்லாண்டாவில் நடந்த லீக் போட்டியில் இன்டர் மயாமி, அட்லாண்டா யுனைடெட் அணிகள் மோதின. ஜெர்மன் பெர்டெராமே (45வது நிமிடம்), மெஸ்ஸி (56, 60வது) கைகொடுக்க இன்டர் மயாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அட்லாண்டா அணிக்கு பிகால்ட் (89வது) ஆறுதல் தந்தார். இப்போட்டியில் 2 கோல் அடித்த மெஸ்ஸி, சகவீரர் பெர்டெராமே கோல் அடிக்க 'அசிஸ்ட்' செய்தார்.
நடப்பு சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள மெஸ்ஸி (25 கோல்), கடந்த முறை 29 கோல் அடித்து 'கோல்டன் பூட்' விருது வென்றிருந்தார். எம்.எஸ்.எல்., கால்பந்து வரலாற்றில், இரண்டு சீசனில் தலா 25 அல்லது அதற்கு மேல் கோல் அடித்த 2வது வீரரானார் மெஸ்ஸி. ஏற்கனவே அட்லாண்டா யுனைடெட் அணியின் ஜோசப் மார்டினெஸ் (2018ல் 34, 2019ல் 29 கோல்) இப்படி சாதித்திருந்தார்.
தவிர, ஒட்டுமொத்த கால்பந்து வரலாற்றில் 936 கோல் அடித்துள்ள மெஸ்ஸி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (981 கோல்) விட 45 கோல் பின்தங்கி உள்ளார்.
