/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சாதிக்குமா சென்னை
/
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சாதிக்குமா சென்னை
ADDED : செப் 12, 2024 11:04 PM

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து இன்று துவங்குகிறது. இதில் சென்னை அணி எழுச்சி கண்டு கோப்பை வெல்ல வேண்டும்.
இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) தொடர் 2013 முதல் நடத்தப்படுகிறது. இதன் 11வது சீசன் இன்று கோல்கட்டாவில் துவங்குகிறது. 13 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நடப்பு 'ஐ-லீக்' சாம்பியன் முகமதியன் அணி அறிமுகமாகிறது. 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் மும்பை அணி களமிறங்குகிறது.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா இரு முறை லீக் சுற்றில் விளையாடும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். அடுத்த நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கான 'பிளே-ஆப்' சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். பைனல், அடுத்த ஆண்டு மே 4ல் நடக்கவுள்ளது.
முதற்கட்டமாக, வரும் டிசம்பர் வரை நடக்கவுள்ள 84 லீக் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள லீக், 'நாக்-அவுட்' சுற்றுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். கோல்கட்டாவில் இன்று நடக்கும் முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி, லீக் சுற்றில் முதலிடம் பிடித்த மோகன் பகான் அணியை சந்திக்கிறது.
இரண்டு முறை (2015, 2018) கோப்பை வென்ற சென்னை அணியில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இம்முறை எழுச்சி பெறலாம். நாளை புவனேஸ்வரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் சென்னை, ஒடிசா அணிகள் மோதுகின்றன.
முன்னாள் இந்திய கேப்டன் சுனித் செத்ரிக்கு இது, கடைசி ஐ.எஸ்.எல்., தொடராக இருக்கும் பட்சத்தில், பெங்களூரு அணிக்கு கோப்பை வென்று விடை பெறலாம். ஈஸ்ட் பெங்கால், கோவா, கேரளா உள்ளிட்ட அணிகளும் கோப்பை வெல்ல போராடலாம்.
இதுவரை சாம்பியன்
ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் கோல்கட்டா அணி அதிகபட்சமாக 3 முறை (2014, 2016, 2020) கோப்பை வென்றுள்ளது. சென்னை (2015, 2018), மும்பை (2021, 2024) தலா 2, பெங்களூரு (2019), ஐதராபாத் (2022), மோகன் பகான் (2023) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
63 கோல்
அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் ஐதராபாத் அணியின் பார்தோலோமிவ் ஆக்பெச்சே முதலிடத்தில் உள்ளார். இவர் 98 போட்டியில், 63 கோல் அடித்துள்ளார்.
346 கோல்
அதிக கோல் அடித்த அணிகளுக்கான பட்டியலில் கோவா முன்னிலை வகிக்கிறது. இதுவரை 211 போட்டியில், 346 கோல் அடித்துள்ளது. அடுத்த நான்கு இடங்களில் மும்பை (302 கோல், 204 போட்டி), சென்னை (262 கோல், 206 போட்டி), கேரளா (239 கோல், 206 போட்டி), பெங்களூரு (208 கோல், 169 போட்டி) உள்ளன.
92 வெற்றி
அதிக வெற்றியை பதிவு செய்த அணிகளுக்கான வரிசையில் மும்பை அணி முதலிடத்தில் உள்ளது. இதுவரை 204 போட்டியில், 92 வெற்றியை பெற்றது. அடுத்த நான்கு இடங்களில் கோவா (84 வெற்றி, 211 போட்டி), பெங்களூரு (67 வெற்றி, 169 போட்டி), சென்னை (64 வெற்றி, 206 போட்டி), கேரளா (62 வெற்றி, 206 போட்டி) அணிகள் உள்ளன.