ADDED : ஜூலை 17, 2024 10:53 PM

போர்ட் லாடர்டேல்: கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெஸ்சி, இன்டர் மயாமி அணிக்காக 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்.
அமெரிக்காவில் நடந்த 'கோபா அமெரிக்கா' கால்பந்து பைனலில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, கொலம்பியாவை வீழ்த்தி 16வது முறையாக கோப்பை வென்றது. இப்போட்டியில் வலது கணுக்காலில் காயமடைந்த மெஸ்சி, கண்ணீருடன் பாதியில் வெளியேறினார்.
இவர், அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கால்பந்து தொடரில் இன்டர் மயாமி அணிக்காக விளையாடி வருகிறார். மயாமி அணி, தனது அடுத்த இரு போட்டிகளில் டொரன்டோ (ஜூலை 18), சிகாகோ (ஜூலை 21) அணிகளை எதிர்கொள்கிறது. தற்போது கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் மெஸ்சி, இவ்விரு போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம். நடப்பு சீசனில் இன்டர் மயாமி சார்பில் 12 போட்டியில் விளையாடிய மெஸ்சி, 12 கோல் அடித்துள்ளார். சகவீரர்கள் 13 கோல் அடிக்க உதவினார். மெஸ்சி விரைவில் குணமடைந்து விரைவில் போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
