தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/மெஸ்ஸி சாகசம்... அர்ஜென்டினா பரவசம்

மெஸ்ஸி சாகசம்... அர்ஜென்டினா பரவசம்

மெஸ்ஸி சாகசம்... அர்ஜென்டினா பரவசம்


ADDED : ஜூலை 04, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயாமி: உலக கோப்பை கால்பந்து 'ரவுண்டு-32' போட்டியில் மெஸ்ஸி, மார்டினெஸ் கோல் அடிக்க, அர்ஜென்டினா அணி 3-2 என 'திரில்' வெற்றி பெற்றது. கடைசி நேர 'சேம்சைடு' கோல் கேப் வெர்டே அணிக்கு வினையாக அமைந்தது.

மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில், உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. அமெரிக்காவின் மயாமி கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 'ரவுண்டு-32' போட்டியில், 'நடப்பு சாம்பியன்' அர்ஜென்டினா, கேப் வெர்டே அணிகள் மோதின. இப்போட்டியை காண 64,478 பேர் வந்தனர்.

மெஸ்ஸி கோல்: ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் லாவ்டாரோ மார்டினெஸ் 'பாஸ்' செய்த பந்தில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலையில் இருந்தது.

சூப்பர் கீப்பர்: இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கேப் வெர்டே அணிக்கு, 59வது நிமிடத்தில் ரியான் மெண்டஸ் 'பாஸ்' செய்த பந்தில் டாம் டுவார்டே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 69, 73வது நிமிடங்களில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் மெஸ்ஸி கோல் அடிக்க முயற்சித்த பந்தை கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்யா தடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

'சேம்சைடு' கோல்: பின், 30 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் மெஸ்ஸி துாக்கி அடித்த பந்தை அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் தலையால் முட்டி சகவீரருக்கு 'பாஸ்' செய்தார். இதில் லிசான்ட்ரோ மார்டினெஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 103வது நிமிடத்தில் லோப்ஸ் கப்ரால் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இந்நிலையில் 111வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் மெஸ்ஸி அடித்த பந்தை சகவீரர் ரொமேரா தலையில் முட்டினார். அப்போது பந்து கேப் வெர்டே அணியின் டினி போர்ஜஸ் கையில் பட்டு 'சேம்சைடு' கோல் ஆனது. இந்த அதிர்ச்சியில் இருந்து கேப் வெர்டே வீரர்களால் மீள முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறியது. இதில் (ஜூலை 7, அட்லாண்டா) எகிப்தை எதிர்கொள்கிறது.

மெஸ்ஸி முதல்வன்

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில், 20 கோல் அடித்த முதல் வீரரானார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இவர், 30 போட்டியில், இம்மைல்கல்லை எட்டினார். அடுத்த இரு இடங்களில் பிரான்சின் எம்பாப்வே (18 கோல், 18 போட்டி), ஜெர்மனியின் மிரோஸ்லவ் குளோஸ் (16 கோல், 24 போட்டி) உள்ளனர்.

'கோல்டன் பூட்' யாருக்கு

இம்முறை அதிக கோல் அடித்தவருக்கு வழங்கப்படும் 'கோல்டன் பூட்' விருதுக்கான பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, முதலிடத்தில் உள்ளார். இதுவரை 4 போட்டியில், ஒரு 'ஹாட்ரிக்' உட்பட 7 கோல் அடித்துள்ளார் மெஸ்ஸி. அடுத்த மூன்று இடங்களில் பிரான்சின் எம்பாப்வே (6 கோல்), இங்கிலாந்தின் ஹாரி கேன் (5), நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் (5) உள்ளனர்.

* அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் முதலிடத்தில் இருந்தால், அவர்கள் சகவீரர்களுக்கு கோல் அடிக்க உதவிய 'அசிஸ்ட்' அடிப்படையில் 'கோல்டன் பூட்' விருது வழங்கப்படும். ஒருவேளை இதுவும் சமநிலையில் இருந்தால், குறைந்த நேரம் விளையாடிய வீரருக்கு இவ்விருது கிடைக்கும்.

எட்டு போட்டியில்...

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடர்ச்சியாக 8 போட்டியில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் மெஸ்ஸி. இதற்கு முன், பிரான்சின் ஜஸ்ட் பான்டைன், பிரேசிலின் ஜெய்ர்சினோ தலா 6 போட்டியில் கோல் அடித்திருந்தனர்.

பீலேவை முந்தினார்

உலக கோப்பை 'நாக்-அவுட்' போட்டிகளில் அதிக கோல் பதிவாக காரணமாக வீரர்கள் வரிசையில் பிரேசிலின் பீலே, பிரான்சின் எம்பாப்வே ஆகியோரை முந்தினார் மெஸ்ஸி. இதுவரை 6 கோல், 6 'அசிஸ்ட்' என, 12 கோல் பதிவாக காரணமாக இருந்தார் மெஸ்ஸி. பீலே (8 கோல், 3 'அசிஸ்ட்'), எம்பாப்வே (9 கோல், 2 'அசிஸ்ட்') தலா 11 கோல் அடிக்க உதவினர்.

மாரடோனாவை முந்தினார்

அமெரிக்காவின் மயாமியில் நடந்த 'ரவுண்டு-32' போட்டியில் அர்ஜென்டினா அணி 3-2 என, கேப் வெர்டே அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் ஒரு கோல் அடித்த மெஸ்ஸி, அர்ஜென்டினாவுக்கு கூடுதலாக 2 கோல் கிடைக்க உதவினார். 'கார்னர்' வாய்ப்பில் இவர் துாக்கி அடித்த பந்தில் சகவீரர் மார்டினெஸ் ஒரு கோல், கேப் வெர்டேயின் போர்ஜஸ் ஒரு 'சேம்சைடு' கோல் அடித்தனர். இதனால் அர்ஜென்டினா 3-2 என வெற்றி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக 'அசிஸ்ட்' செய்த வீரர்கள் வரிசையில் அர்ஜென்டினா ஜாம்பவான் மாரடோனாவை (8 'அசிஸ்ட்') முந்தி முதலிடம் பிடித்தார் மெஸ்ஸி. இவர், 9 'அசிஸ்ட்' செய்துள்ளார்.

சூப்பர் கோல்கீப்பர்

லீக் சுற்றில் ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளுக்கு அதிர்ச்சி தந்தார் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்யா 40, 'உலக சாம்பியன்' அர்ஜென்டினாவுக்கும் 'தண்ணி' காட்டினார். அர்ஜென்டினாவின் 8 கோல் அடிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்ட இவர், அதிக கோல் தடுத்த கோல்கீப்பர் பட்டியலில் குராசோவின் எலாய் ரூம் (20), பராகுவேயின் ஆர்லாண்டோ கில் (19) ஆகியோருக்கு பின் 3வது இடம் பிடித்தார்.

போட்டி முடிந்த பின் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி, வோன்சின்யாவை பாராட்டினார். இப்போட்டியில் மெஸ்ஸியின் 5 கோல் அடிக்கும் முயற்சிகளை தடுத்தார். வோன்சியா கூறுகையில், ''என்னை கட்டியணைத்த மெஸ்ஸி, 'நீங்கள் சிறந்த வீரர். உங்கள் நாட்டு மக்கள், உங்களை நினைத்து பெருமை படுவர்', என பாராட்டினார்,'' என்றார்.

மனம் கவர்ந்த கேப் வெர்டே

உலக கோப்பையில் கேப் வெர்டே அணி இம்முறை அறிமுகமானது. அட்லாண்டிக் பெருங்கடலில், மேற்கு ஆப்ரிக்க கரையில் அமைந்துள்ள சிறிய தீவு தான் கேப் வெர்டே. இதன் மக்கள் தொரை 5 லட்சம். லீக் சுற்றில் ஸ்பெயின் (0-0), உருகுவே (2-2), சவுதி அரேபியாவுக்கு (0-0) எதிராக 'டிரா' செய்தது. 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறிய மிகச் சிறிய நாடான கேப் வெர்டே, 'ரவுண்டு-32' போட்டியில், 'நடப்பு சாம்பியன்' அர்ஜென்டினாவிடம் வெற்றியை எளிதாக விட்டுக்கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் அடித்த 'சேம்சைடு' கோலால் கேப் வெர்டே அணி வெளியேறியது. இருப்பினும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது கேப் வெர்டே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us