ADDED : ஆக 08, 2026 09:14 PM

பியுனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 39. இவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி 68, சமீபகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். ரோசாரியோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜார்ஜ், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
'ரவுண்டு-16' சுற்றில் ரிபாகினா
டொரான்டோ: கனடாவில், பெண்களுக்கான நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரண்டாவது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-2, 7-5 என, அமெரிக்காவின் ஆன் லியை வீழ்த்தினார். அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-4 என, கிரீசின் மரியா சக்காரியை தோற்கடித்தார். ஜப்பானின் நவோமி ஒசாகா 6-1, 6-2 என, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை வென்றார். சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 6-7, 7-6, 6-4 என, அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்டை வீழ்த்தினார்.
பிளின்டாப் விலகல்
லண்டன்: இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, கடந்த 2024ல் (செப்டம்பர்) முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' ஆன்ட்ரூ பிளின்டாப் 48, நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், இப்பதவியில் இருந்து விலகினார் பிளின்டாப். இவருக்கு பதிலாக மைக் யார்டி, புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'பிக் பாஷ் லீக்' தொடருக்கான சிட்னி தண்டர் அணியின் பயிற்சியாளராக பிளின்டாப் செயல்பட உள்ளார்.
எக்ஸ்டிராஸ்
* தென் கொரியாவின் சியோலில், வரும் செப். 18-19ல் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதிச் சுற்று-2 நடக்கவுள்ளது. இதில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
* லடாக் மாரத்தான் ஓட்டத்தின் 13வது சீசன் வரும் செப் 10-13ல் நடக்கவுள்ளது. இதன் மொத்த பரிசுத்தொகை, முதல்முறையாக ரூ. ஒரு கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* மேகாலயாவில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ஷில்லாங் லாஜோங் அணி 5-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.
* ஜப்பானில் நடக்கும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 2-3 (2-11, 6-11, 11-8, 11-7, 5-11) என, தென் கொரியாவின் யுபின் ஷின்னிடம் தோல்வியடைந்தார்.
* ''ஒலிம்பிக்கில் பங்கேற்பது ஒவ்வொரு விளையாட்டு நட்சத்திரங்களின் கனவு. அடுத்த இரண்டு ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். இதுவே எனது இலக்கு,'' என, இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் கூறினார்.
