ADDED : ஜூலை 06, 2026 11:33 PM

நியூ ஜெர்சி: பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 34. 'அட்டாக்கிங் மிட்பீல்டர்' அல்லது முன்கள வீரரான இவர், 2010ல் (ஆக. 9) நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடந்த அமெரிக்காவுக்கு எதிரான சர்வதேச நட்பு போட்டியில் அறிமுகமானார். பிரேசில் அணிக்கு கேப்டனாக இருந்த நெய்மரை காயம் துரத்தியது. கடைசியாக 2023ல் முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். இதிலிருந்து மீண்ட இவர், உலக கோப்பை 23வது சீசனுக்கான பிரேசில் அணியில் இடம் பிடித்தார்.
நான்காவது முறையாக (2014, 2018, 2022, 2026) உலக கோப்பையில் பங்கேற்ற நெய்மர், முதலிரண்டு லீக் போட்டியில் விளையாடவில்லை. ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 15 நிமிடம் மட்டும் விளையாடிய நெய்மர், 981 நாட்களுக்கு பின் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். சமீபத்தில் முடிந்த ஜப்பானுக்கு எதிரான 'ரவுண்டு-32' போட்டியில் விளையாடாத இவர், நார்வே அணிக்கு எதிரான 'ரவுண்டு-16' போட்டியில் 67வது நிமிடத்தில் களமிறங்கினார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் நெய்மர் ஒரு கோல் அடித்த போதும் பிரேசில் அணி 1-2 என தோல்வியடைந்து, உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் நெய்மர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நெய்மர் கூறுகையில், ''நான் முயற்சி செய்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. எனது கால்பந்து பயணத்தை எங்கு தொடங்கினேனோ, அங்கேயே நிறைவு செய்கிறேன்,'' என்றார்.
இதன்மூலம் நெய்மரின் 16 ஆண்டு கால சர்வதேச கால்பந்து பயணம் முடிவுக்கு வந்தது.
130 போட்டி... 80 கோல்
பிரேசில் அணிக்காக 130 போட்டியில் விளையாடிய நெய்மர், 80 கோல் அடித்துள்ளார். அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்கள் வரிசையில் பீலே (77 கோல்), ரொனால்டோ (62) ஆகியோரை முந்திய நெய்மர் முதலிடத்தில் உள்ளார்.
பீலே வழியில்
நான்கு உலக கோப்பை தொடரில் கோல் அடித்த 2வது பிரேசில் வீரரானார் நெய்மர். இவர், 2014ல் 4, 2018, 2022ல் தலா 2, 2026ல் 1 என, 9 கோல் அடித்துள்ளார். ஏற்கனவே பீலே இப்படி சாதித்திருந்தார்.
* உலக கோப்பையில் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ (15 கோல்), பீலே (12) ஆகியோருக்கு பின் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் நெய்மர் (9).
வென்ற கோப்பை/பதக்கம்
கடந்த 2013ல் நெய்மர் இடம் பிடித்திருந்த பிரேசில் அணி, 'கான்பெடரேஷன்ஸ்' கோப்பை வென்றது. பின், லண்டன் ஒலிம்பிக்கில் (2012) வெள்ளி வென்ற பிரேசில் அணி, ரியோ ஒலிம்பிக்கில் (2016) தங்கத்தை தட்டிச் சென்றது. கடந்த 2021ல் நடந்த 'கோபா அமெரிக்கா' தொடரில் பிரேசில் அணி பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தது.
