/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு... பாய்ச்சங் பூட்டியா ஆலோசனை
/
இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு... பாய்ச்சங் பூட்டியா ஆலோசனை
இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு... பாய்ச்சங் பூட்டியா ஆலோசனை
இந்திய கால்பந்து வளர்ச்சிக்கு... பாய்ச்சங் பூட்டியா ஆலோசனை
ADDED : அக் 03, 2024 11:05 PM

புதுடில்லி: ''கால்பந்து மீது காதல் கொண்ட இளம் இந்திய திறமைகளை கண்டறிய வேண்டும்,'' என பாய்ச்சங் பூட்டியா வலியுறுத்தினார்.
சர்வதேச கால்பந்து அரங்கில் இந்திய அணியின் நிலை பரிதாபமாக உள்ளது. 'பிபா' ரேங்கிங் பட்டியலில் 126வது இடத்தில் உள்ளது. உலக கோப்பை தொடருக்கு (2026) தகுதி பெற தவறியது. நமது இளம் அணி (20 வயதுக்கு உட்பட்ட), வங்கதேசத்திடம் வீழ்ந்தது.
இது குறித்து இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்ச்சங் பூட்டியா கூறியது: சமீப காலமாக இந்திய அணி இறங்குமுகத்தில் செல்கிறது. 'ரேங்கிங்' பட்டியலில் 100ல் இருந்து 126வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்திய ஜூனியர் அணிகள் சாதித்தால் தான், சீனியர் அளவில் அசத்த முடியும். 17, 19, 20 வயதுக்கு உட்பட்ட நமது அணிகள் ஆசிய, உலக கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற வேண்டும். இங்கு இருந்து தான் முன்னேற்றம் ஆரம்பிக்கும்.
தற்போது ஜூனியர் வீரர்களின் செயல்பாடு திருப்தியாக இல்லை. 20 வயதுக்கு உட்பட்ட அணி, தெற்காசிய தொடரில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது. ஆசிய கோப்பைக்கு தகுதி பெற தவறியது.
இந்திய கால்பந்தின் வளர்ச்சிக்கு அடிமட்ட அளவில் கடினமாக உழைக்க வேண்டும். கிராமப்புறம் உட்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து சிறந்த வீரர்களை தேட வேண்டும். அதிகமான சிறுவர்களை கால்பந்து பக்கம் கொண்டு வர வேண்டிய பொறுப்பு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு உண்டு.
சிறந்த பயிற்சி: ஐ.எஸ்.எல்., ஐ-லீக் தொடர் மூலம் அதிகளவில் இளம் வீரர்களை உருவாக்க வேண்டும். அப்போது தான் ஐரோப்பிய அணிகளின் தரத்தை நாம் எட்ட முடியும். மாநில கால்பந்து சங்கங்கள், கிளப்கள் அடிமட்ட அளவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இளம் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். இதை தான் ஐரோப்பிய லீக் அணிகள் செய்கின்றன. இளம் திறமை மீது முதலீடு செய்கின்றன. அவர்களை பட்டை தீட்டி முத்தான வீரர்களாக மாற்றுகின்றனர். இதனால் வீரர்களும் பயன் அடைகின்றனர். நாட்டுக்கும் பயன் கிடைக்கிறது. இந்த இளம் வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய அணியின் வளர்ச்சிக்கு கைகொடுப்பர்.
எனது கால்பந்து பயிற்சி பள்ளியான 'பாய்ச்சங் பூட்டியா புட்பால் ஸ்கூல்ஸ்', இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் கால்பந்து கிளப் உடன் இணைந்து செயல்பட உள்ளது. 6 -16 வயது இளம் வீரர்களுக்கு சவுத்தாம்ப்டன் சென்று அங்குள்ள பயிற்சி முறையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்குவது எங்களது இலக்கு.
இவ்வாறு பாய்ச்சங் பூட்டியா கூறினார்.