/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
ரொனால்டோ 900 கோல்... * கால்பந்து அரங்கில் சாதனை
/
ரொனால்டோ 900 கோல்... * கால்பந்து அரங்கில் சாதனை
ADDED : செப் 06, 2024 11:18 PM

லிஸ்பன்: கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என சாதனை படைத்தார் ரொனால்டோ.
ஐரோப்பிய கால்பந்து அணிகள் மோதும் நேஷன்ஸ் லீக் தொடர் நடக்கிறது. போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் 'குரூப் 1' போட்டி நடந்தது. இதில் போர்ச்சுகல், குரோஷிய அணிகள் மோதின. போட்டியின் 7வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் தியாகோ தலாட் ஒரு கோல் அடித்தார்.
34 வது நிமிடத்தில் மெண்டெஸ் துல்லியமாக கொடுத்த பந்தை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோலாக மாற்றினார். இது போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 131வது கோல். இத்துடன் கிளப் அரங்கில் 739 என சேர்த்து, ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் 900 கோல் அடித்த முதல் வீரர் ஆனார்.
41வது நிமிடத்தில் தலாட், 'சேம்சைடு' கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. முடிவில் போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரொனால்டோ கூறுகையில்,'' எனது கால்பந்து வாழ்க்கையில் இது முக்கியமான மைல்கல். அடுத்து 1000 கோல் அடிப்பதே இலக்கு,'' என்றார்.
சாதித்தது எப்படி
ரொனால்டோ தனது 17 வயதில் (2002, அக். 7) போர்ச்சுகல் ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்காக களமிறங்கினார். முதல் போட்டியில் 2 கோல் அடித்தார். தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் என பல்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடினார். தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடுகிறார். 30 வயதுக்கும் மேல் (2015, பிப்.,) ரொனால்டோவின் திறமை இன்னும் அதிகமானது. கடந்த 9 ஆண்டில் மட்டும் 437 கோல் அடித்துள்ளார்.
கோல் விபரம்
அணி கோல்
போர்ச்சுகல் 131
ஸ்போர்ட்டிங் 5
ரியல் மாட்ரிட் 450
மான்செஸ்டர் யுனைடெட் 145
யுவண்டஸ் 101
அல் நாசர் 68
66 'ஹாட்ரிக்'
ரொனால்டோ இதுவரை 2002-03 முதல் 23 சீசனில் 900 கோல் அடித்துள்ளார். 2011-12 சீசனில் அதிகபட்சம் 69 கோல் அடித்தார்.
* 66 முறை 'ஹாட்ரிக்' கோல் அடித்தார்.
* 'பெனால்டியில்' 164, 'பிரீ கிக்' வாய்ப்பில் 64 கோல் அடித்தார்.
* சொந்தமண்ணில் 479, அன்னிய மண்ணில் 361, பொதுவான இடங்களில் நடந்த போட்டிகளில் 60 கோல் அடித்துள்ளார்.
பீலே 1,279 கோல்
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் வரலாறு, புள்ளிவிபர பிரிவு (ஐ.எப்.எப்.எச்.எஸ்.,) வீரர்களின் கோல் எண்ணிக்கையை பதிவு செய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அணிகள், தேசிய அணிகளுக்கான போட்டிகளை மட்டும் இது கணக்கில் எடுத்துக் கொள்ளும். ஆனால் பிரேசிலின் மறைந்த பீலே, 1,279 கோல் (1,363 போட்டி) அடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால் ஐ.எப்.எப்.எச்.எஸ்., கணக்கின் படி 762 கோல் தான் அடித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர பிரேசிலின் ஆர்தர், 1909-1935ல் 1,329 கோல் அடித்துள்ளார். ஆனால் இவர் 354 கோல் மட்டும் அடித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, ஜெர்மனியின் எர்வின் (989+ கோல்), ஆஸ்திரியாவின் ஜோசப் பிகன் (950+), இங்கிலாந்தின் ரோன்னியே (934+) 900க்கும் மேல் கோல் அடித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கணக்கின்படி, ரொனால்டோ முதன் முறையாக 900 கோல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
'டாப்-5' வீரர்கள்
வீரர்/அணி கோல்
ரொனால்டோ/போர்ச்சுகல் 900
மெஸ்சி/அர்ஜென்டினா 838
பீலே/பிரேசில் 762
ரொமாரியோ/பிரேசில் 755
புஸ்காஸ்/ஹங்கேரி 724