ADDED : மார் 09, 2024 09:58 PM

யூபியா: சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரில் சர்வீசஸ் அணி கோப்பை வென்றது. பைனலில் 1-0 என, கோவா அணியை வென்றது.
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் தொடரான சந்தோஷ் டிராபி 77வது சீசன் அருணாச்சல பிரதேசத்தில் நடந்தது. பைனலில் கோவா, சர்வீசஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சர்வீசஸ் அணிக்கு 68வது நிமிடத்தில் ஷபீல் ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய கோவா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் சர்வீசஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் 3வது இடத்தை கேரளாவுடன் (7) பகிர்ந்து கொண்டது. முதலிரண்டு இடங்களில் மேற்கு வங்கம் (32 முறை), பஞ்சாப் (8) உள்ளன.
