ADDED : மார் 07, 2024 10:18 PM

யூபியா: சந்தோஷ் டிராபி கால்பந்து பைனலுக்கு சர்வீசஸ் அணி முன்னேறியது. அரையிறுதியில் 2-1 என மிசோரம் அணியை வென்றது.
அருணாச்சல பிரதேசத்தில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் சந்தோஷ் டிராபி 77வது சீசன் நடக்கிறது. முதல் அரையிறுதியில் மிசோரம், சர்வீசஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் சர்வீசஸ் அணியின் ராகுல் ராமகிருஷ்ணன் ஒரு கோல் அடித்தார். இதற்கு மிசோரம் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் சர்வீசஸ் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 83வது நிமிடத்தில் சர்வீசஸ் அணியின் பிகாஷ் தபா ஒரு கோல் அடித்து 2-0 என முன்னிலை பெற்றுத்தந்தார். தொடர்ந்து போராடிய மிசோரம் அணிக்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+3வது) மால்சாம்பெலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் சர்வீசஸ் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று 12வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. இத்தொடரில் சர்வீசஸ் அணி இதுவரை 6 முறை கோப்பை வென்றுள்ளது.
மற்றொரு அரையிறுதியில் கோவா, மணிப்பூர் அணிகள் மோதின. கோவா அணி 2-1 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. மார்ச் 9ல் நடக்கும் பைனலில் கோவா, சர்வீசஸ் அணிகள் மோதுகின்றன.
