ADDED : ஜூன் 26, 2026 11:11 PM

டொரன்டோ: தென் ஆப்ரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரில் (2010) ரசிகர்கள் பயன்படுத்திய 'உவ்சேலா' மிகவும் பிரபலம். ஒட்டுமொத்த மைதான ரசிகர்கள் பிளாஸ்டிக்கால் ஆன நீண்ட விசில் போன்ற உவ்சேலாவை ஊத, வித்தியாசமான ஒலியால் மைதானம் அதிர்ந்தன. இந்த வரிசையில் 'கனடியன் கிளாப்பர்' வந்துள்ளது.
கனடாவின் டொரன்டோ நகரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு சிகப்பு நிறத்தினாலான 'கனடியன் கிளாப்பர்' இலவசமாக வழங்கப்படுகிறது. நம்ம ஊரில் குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் 'கிலுக்கு' போன்றது.
இது, கனடாவின் அடையாளமான 'மேப்பிள் இலை' வடிவத்தில், 18 செ.மீ., அளவுள்ள சிவப்பு நிற சத்தமிடும் கருவி. விசிறி போல மூன்று பகுதிகளை கொண்ட கைதட்டும் 'கனடியன் கிளாப்பர்', மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது வீரர்களை ஊக்கப்படுத்த ரசிகர்கள் கை தட்டுவதற்கு பதிலாக, கிலுக்கை ஆட்டுவது போல, இந்த 'கனடியன் கிளாப்பரை' பயன்படுத்தினால், கைதட்டுவது போன்ற சத்தம் எழுப்பப்படும். தற்போது 'கனடியன் கிளாப்பர்' டொரன்டோ நகரில் பிரபலமடைந்துள்ளது.
