இந்தியாவுக்கு 11 தங்கம்: காமன்வெல்த் பளுதுாக்குதலில்
இந்தியாவுக்கு 11 தங்கம்: காமன்வெல்த் பளுதுாக்குதலில்
ADDED : செப் 18, 2024 10:21 PM

சுவா: காமன்வெல்த் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு 11 தங்கம் கிடைத்தது.
பிஜியில், காமன்வெல்த் யூத், ஜூனியர், சீனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 'யூத்' 49 கிலோ பிரிவில் இந்தியாவின் பாபுலால் ஹெம்புரோம், காமன்வெல்த், தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார். இவர், 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 114 கிலோ பளுதுாக்கினார்.
பெண்களுக்கான 'யூத்' 55 கிலோ பிரிவில் இந்தியாவின் மினா சான்டா, தேசிய சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 81, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 99 என, மொத்தம் 180 கிலோ பளுதுாக்கினார்.
ஆண்களுக்கான 'யூத்' 73 கிலோ பிரிவில் இந்தியாவின் பேதபாரத் பரலி, தேசிய சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக 200 கிலோ பளுதுாக்கினார்.
மற்ற பிரிவுகளில் இந்தியாவின் ஜோஷ்னா சபர், அகன்ஷா, அஷ்மிதா, பார்கவி, மஹாராஜன், கிஷோர், மாதவன், போலோ யாலம் ஆகியோர் தங்கம் வென்றனர். இதுவரை இத்தொடரில் இந்தியாவுக்கு 11 தங்கம், 3 வெள்ளி கிடைத்துள்ளது.
