ADDED : ஏப் 25, 2026 07:54 PM

தும்கூர்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய வீரர் அபே சிங் தகுதி.
கர்நாடகாவின் தும்கூர் நகரில், தேசிய ஜூனியர் (20 வயது) பெடரேஷன் தடகள சாம்பியன்ஷிப் 24வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் 'ரிலையன்ஸ்' அணி சார்பில் அபே சிங் பங்கேற்றார். இலக்கை 10.41 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இவர், ஹாங்காங்கில் நடக்கவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர், 2024ல் நடந்த பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் கைப்பற்றிய இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மாவின் 'கைடு ரன்னராக' இருந்தார்.
அடுத்த இரு இடங்களை ஜம்மு காஷ்மீரின் யுவராஜ் சிங் சிப் (10.523 வினாடி), உ.பி.,யின் அன்ஷு ரஜாக் (10.524) கைப்பற்றினர்.
நிபம் சாதனை: பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் உ.பி.,யின் நிபம், பந்தய துாரத்தை 11.53 வினாடியில் கடந்து முதலிடத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், இலக்கை அதிவேகமாக கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு தமிழகத்தின் அபினயா ராஜராஜன் 11.54 வினாடியில் இலக்கை அடைந்தது தேசிய சாதனையாக இருந்தது.
அடுத்த இரு இடங்களை தமிழகத்தின் பாவனா (11.87 வினாடி), குஜராத்தின் காஜல் ஹீராபாய் வஜா (11.88) கைப்பற்றினர்.
மதுமிதா 3வது இடம்: பெண்களுக்கான குண்டு எறிதலில் கேரளாவின் அனுபிரியா (14.35 மீ.,) முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை பாட்டியாலாவின் பூஜா குமாரி (13.80 மீ.,), தமிழகத்தின் மதுமிதா (13.38) தட்டிச் சென்றனர்.
