ADDED : அக் 30, 2024 06:44 PM

கொலராடோ: உலக குத்துச்சண்டை (19 வயது) பைனலுக்கு இந்தியாவின் அஞ்சலி குமாரி (57 கிலோ), கிரிஷா வர்மா (75 கிலோ) உள்ளிட்டோர் முன்னேறினர்.
அமெரிக்காவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஞ்சலி குமாரி, ஜப்பானின் ஒகயாமா சகுரா மோதினர். அபாரமாக ஆடிய அஞ்சலி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான 48 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சஞ்சல் சவுத்தரி 5-0 என ஆஸ்திரேலியாவின் ஆண்டர்டன் லியாவை வீழ்த்தினார். பெண்களுக்கான 75 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிரிஷா வர்மா 3-2 என நியூசிலாந்தின் நிக்கா பெரெசை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் வினி 4-1 என ஆஸ்திரேலியாவின் ஸ்டார்ச் சியாராவை தோற்கடித்தார். பெண்கள் பிரிவில் இதுவரை 7 பேர் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே வன்ஷ்கா கோஸ்வாமி (80+ கிலோ), கிருத்திகா வாசன் (80), அகன்ஷா (70) பைனலுக்குள் நுழைந்தனர்.
ஆண்களுக்கான 55 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் கிரிஷ் பால், இங்கிலாந்தின் ஜோசப் டர்னரை வீழ்த்தி, 7வது பதக்கத்தை உறுதி செய்தார். ஏற்கனவே இந்திய வீரர்களான ரிஷி சிங் (50 கிலோ), சுமித் (70), ராகுல் (75), ஆர்யன் (85), ஹேமந்த் சங்வான் (90), லக்சய் ரதி (90+) அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
