/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அர்ச்சனா காமத் ஓய்வு: டேபிள் டென்னிசில் இருந்து
/
அர்ச்சனா காமத் ஓய்வு: டேபிள் டென்னிசில் இருந்து
ADDED : ஆக 22, 2024 11:50 PM

புதுடில்லி: மேற்படிப்புக்காக இளம் இந்திய வீராங்கனை அர்ச்சனா காமத், டேபிள் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத் 24. சமீபத்தில் முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் அணியில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலாவுடன் இடம் பிடித்திருந்தார். இந்திய அணி காலிறுதி வரை சென்று வரலாறு படைத்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலையில், பொதுக் கொள்கை பாடத்தில் முதுகலைப்பட்டம் பெறுவதற்காக டேபிள் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள்.
இதுகுறித்து அர்ச்சனா காமத் கூறியது: டேபிள் டென்னிஸ் போல எனக்கு படிப்பும் பிடிக்கும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதால், கடந்த ஆண்டு படிப்பின் மீது கவனம் செலுத்தவில்லை. தற்போது ஒலிம்பிக் முடிந்துவிட்டதால், மீண்டும் படிக்க செல்கிறேன்.
இந்தியாவுக்காக விளையாடியதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். பாரிஸ் ஒலிம்பிக்கை என்னால் என்றும் மறக்க முடியாது. டேபிள் டென்னிஸ் சீனியர்களான சரத் கமல், மணிகா பத்ராவுடன் பயிற்சி மேற்கொண்டது, டென்னிஸ் நட்சத்திரங்களான ஜோகோவிச், நடால், அல்காரஸ் சந்தித்தது போன்ற சிறந்த தருணங்கள் என்றும் மனதில் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அர்ச்சனா கூறினார்.