ADDED : ஏப் 23, 2024 10:34 PM

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை தரவரிசை போட்டியில் இந்திய பெண்கள் அணி முதலிடம் பிடித்தது.
உலக கோப்பை வில்வித்தை தொடரின் 18 வது சீசன் 'ஸ்டேஜ் 1' போட்டி, நேற்று சீனாவின் ஷாங்காய் நகரில் துவங்கியது. இந்தியா சார்பில் முன்னணி வீராங்கனை தீபிகா குமாரி, இளம் நட்சத்திரம் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நேற்று தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்தியா சார்பில் ஜோதி, ஆதித்தி, பர்னீத் கவுர், அவ்னீத் கவுர் கூட்டணி களமிறங்கியது.
ஹாங்சு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற ஜோதி 711 புள்ளி எடுத்து இரண்டவது இடம் பிடித்தார். ஆதித்தி 704 புள்ளியுடன் 8 வது இடம் பிடிக்க, பர்னீத் கவுர் (703) 14வது, அவ்னீத் கவுர் (696) 23வது இடம் பிடித்தனர். ஒட்டுமொத்தமாக 2118 புள்ளி எடுத்த இந்திய அணி, தகுதிச்சுற்றில் 'நம்பர்-1' இடம் பிடித்தது.
ஆண்கள் காம்பவுண்டு பிரிவில் இந்திய வீரர்கள் யாரும் 'டாப்-10' வரிசையில் இடம் பெறவில்லை. அபிஷேக் வர்மா 13வது (708), பிரியான்ஷ் 14 வது (707) இடம் பெற்றனர். பிரதமேஷ், ரஜத் சவுகான் தலா 706 புள்ளி எடுத்தனர். இருப்பினும் 2121 புள்ளியுடன் இந்திய அணி, நான்காவது இடம் பிடித்தது.
