/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாரா வில்வித்தை: இந்தியா அபாரம்
/
பாரா வில்வித்தை: இந்தியா அபாரம்
ADDED : பிப் 10, 2025 11:07 PM

பாங்காக்: ஆசிய பாரா வில்வித்தை கடைசி நாளில் இந்தியா, இரண்டு தங்கம் உட்பட ஆறு பதக்கம் கைப்பற்றியது.
தாய்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வில்வித்தை ஆசிய கோப்பை உலக ரேங்கிங் தொடர் நடந்தது. நேற்று கடைசி நாளில் தனிநபர் பிரிவு போட்டிகள் நடந்தன.
பெண்களுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு பைனலில் இந்தியாவின் சரிதா, சிங்கப்பூரின் நுார் அலிம் மோதினர். சரிதா 143-142 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் ஷ்யாம் சுந்தர், 143-141 என இந்தோனேஷியாவின் சுவாகுமிலாங்கை வென்று தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.
இந்தியாவின் ராகேஷ் குமார், மலேசியாவின் விரோ ஜூலின் மோதிய வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி 140-140 என சமனில் முடிந்தது. பின் நடந்த 'ஷூட் ஆப்பில்' ராகேஷ் 10-9 என வெற்றி பெற்று, பதக்கம் தட்டிச் சென்றார்.
பூஜா வெள்ளி
பெண்களுக்கான ரிகர்வ் பிரிவு பைனலில் இந்தியாவின் பூஜா ஜத்யன், 0-6 என செக் குடியரசின் ஜிவா லாவ்ரின்ச்சிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், 6-2 என மலேசியாவின் நுார்பைசலை வீழ்த்தினார்.
ரிகர்வ்/காம்பவுண்டு 'டிவிசன் 1' பிரிவில் இந்திய வீரர் அடில் அன்சாரி, 120-116 என துருக்கியின் யங் மானை சாய்த்து, வெண்கலம் வசப்படுத்தினார்.
இத்தொடரில் இந்தியா, 6 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கம் வென்றது.