வில்வித்தை: வரலாறு படைத்தார் திராஜ்: உலக கோப்பை 'பைனலில்' தங்கம்
வில்வித்தை: வரலாறு படைத்தார் திராஜ்: உலக கோப்பை 'பைனலில்' தங்கம்
ADDED : செப் 14, 2026 11:04 PM

சால்டில்லோ: உலக கோப்பை வில்வித்தை பைனல்சில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என வரலாறு படைத்தார் திராஜ்.
மெக்சிகோவில் உலக கோப்பை வில்வித்தை பைனல் தொடர் நடந்தது. நடப்பு சீசனில் நடந்த 4 உலக கோப்பை ஸ்டேஜ் தொடர்களில் தனிநபர் ரீகர்வ், காம்பவுண்டு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 32 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் அன்டல்யா போட்டியில் 'ரிகர்வ்' பிரிவில் தங்கம் வென்ற திராஜ் பொம்மதேவரா மட்டும் இதில் பங்கேற்க தகுதி பெற்றார்.
போட்டிகள் 'நாக் அவுட்' முறையில் நடந்தன. முதலில் காலிறுதியில் களமிறங்கிய திராஜ் 25, துருக்கியின் பெர்கிமை 7-1 என வீழ்த்தினார். அடுத்து அரையிறுதியில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிரான்சின் ஜீன் சார்லசை 7-1 என சாய்த்தார்.
'திரில்' வெற்றி
பைனலில் திராஜ், ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை சந்தித்தார். முதல் 4 செட் முடிவில் திராஜ் 3-5 (28-28, 28-29, 29-28, 28-30) என பின்தங்கி இருந்தார். கடைசி செட்டை 28-27 என கைப்பற்ற, போட்டி 5-5 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இதில் இலக்கை துல்லியமாக தாக்கினார் திராஜ் (10 புள்ளி). மறுபக்கம் ஜுன்யா (9) சற்று ஏமாற்றினார். முடிவில் 6-5 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றார் திராஜ்.
உலக கோப்பை பைனல்ஸ் வில்வித்தை தொடரில் 'ரிகர்வ்' பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என வரலாறு படைத்தார்.
