அர்ஜுன்-ஆதித்யா 'தங்கம்': 'பிக்கிள்பால்' சாம்பியன்ஷிப்பில்
அர்ஜுன்-ஆதித்யா 'தங்கம்': 'பிக்கிள்பால்' சாம்பியன்ஷிப்பில்
ADDED : ஏப் 16, 2026 10:28 PM

புளோரிடா: யு.எஸ்., ஓபன் 'பிக்கிள்பால்' இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சிங், ஆதித்யா சிங் ஜோடி தங்கம் வென்றது.
அமெரிக்காவின் புளோரிடாவில், யு.எஸ்., ஓபன் 'பிக்கிள்பால்' சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் 5.0 பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன் சிங், ஆதித்யா சிங் ஜோடி, அமெரிக்காவின் வென் லின், ஜோ மியோட் ஜோடியை சந்தித்தது. இதில் அசத்திய அர்ஜுன், ஆதித்யா ஜோடி 2-1 (9-11, 11-2, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றியது.
இது, இத்தொடரில் அர்ஜுன் கைப்பற்றிய 3வது தங்கம். ஏற்கனவே இரட்டையர் (18 வயது, ஆதித்யா சிங்), தனிநபர் 5.0 பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.
ஆண்கள் இரட்டையர் 4.5 பிரிவு பைனலில் இந்தியாவின் பந்த் தாக்கர், அதர்வா ஷேத் ஜோடி 0-2 (8-11, 9-11) என, கேயன் அபேல், மைக்கேல் வான் துசென் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது.
இதுவரை 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 6 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
