/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய கோப்பை ஹாக்கி: 'சூப்பர்-4' சுற்றுக்கு இந்தியா தகுதி
/
ஆசிய கோப்பை ஹாக்கி: 'சூப்பர்-4' சுற்றுக்கு இந்தியா தகுதி
ஆசிய கோப்பை ஹாக்கி: 'சூப்பர்-4' சுற்றுக்கு இந்தியா தகுதி
ஆசிய கோப்பை ஹாக்கி: 'சூப்பர்-4' சுற்றுக்கு இந்தியா தகுதி
ADDED : ஆக 31, 2025 10:35 PM

ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 3-2 என, ஜப்பானை வீழ்த்தி, 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறியது.
பீஹாரின் ராஜ்கிர் நகரில் ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு 4வது நிமிடத்தில் மன்தீப் சிங், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கோசெய் கவாப் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 46வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஒரு 'பீல்டு' கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய ஜப்பான் அணிக்கு கோசெய் கவாப், 59வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் சீனாவை வீழ்த்திய இந்தியா (6 புள்ளி), தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து, 'சூப்பர்-4' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது. இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் இன்று கஜகஸ்தானை சந்திக்கிறது.
சீனா 13 கோல்: மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் சீனா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த சீன அணி 13-1 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சீனா சார்பில் லுா யுவான்லின் 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். சீன அணி (3 புள்ளி), தனது கடைசி லீக் போட்டியில் இன்று ஜப்பானை (3 புள்ளி) சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, 'சூப்பர்-4' சுற்றுக்கு தகுதி பெறும். ஒருவேளை போட்டி 'டிரா' ஆனால், கோல் அடிப்படையில் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறலாம்.

