சித்ரேஷ் நான்காவது இடம் * ஆசிய பீச் படகு போட்டியில்
சித்ரேஷ் நான்காவது இடம் * ஆசிய பீச் படகு போட்டியில்
ADDED : ஏப் 28, 2026 11:00 PM

சான்யா: ஆசிய பீச் விளையாட்டு 'பார்முலா கைட்' படகு போட்டியில் 4வது இடம் பெற்று, வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்தார் சித்ரேஷ்.
சீனாவின் சான்யா நகரில், ஆசிய பீச் விளையாட்டு 6வது சீசன் நடக்கிறது. இதில் 45 நாடுகளில் இருந்து, 1790 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 4 போட்டிகளில், 18 வீரர், 13 வீராங்கனைகள் என, 33 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஆண்களுக்கான படகு போட்டி நடந்தது. இதில் 'பார்முலா கைட்' பிரிவில் இந்தியாவின் சித்ரேஷ் தத்தா பங்கேற்றார். மொத்தம் 15 பந்தயங்களில் களமிறங்கிய சித்ரேஷ், 56 புள்ளி பெற்று, நான்காவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்க வாய்ப்பு நழுவியது. தாய்லாந்தின் ஜோசப் ஜோனாதன் (22), சீனாவின் ஷிம்மிங் ஜு (31), ஜின்னுயாவோ (36) முதல் மூன்று இடம் பெற்று, பதக்கம் கைப்பற்றினர்.
கூடைப்பந்தில் 'ஷாக்'
கூடைப்பந்தில் இந்திய ஆண்கள் அணி 'சி' பிரிவில் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் கஜகஸ்தான், பஹ்ரைனை வென்றது. அடுத்து கத்தாரிடம் தோற்க, பட்டியலில் 2வது இடம் பெற்று, காலிறுதி 'பிளே ஆப்' போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் 19-18 என இந்திய அணி, இலங்கையை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.
இதில் ஏமாற்றிய இந்திய அணி, 14-18 என பிலிப்பைன்சிடம் தோல்வியடைந்தது.
