/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா * மலேசியாவை வீழ்த்தியது
/
ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா * மலேசியாவை வீழ்த்தியது
ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா * மலேசியாவை வீழ்த்தியது
ஆசிய ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா * மலேசியாவை வீழ்த்தியது
ADDED : செப் 11, 2024 11:08 PM

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. நேற்று நடந்த போட்டியில் மலேசியாவை வீழ்த்தி, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி முதல் இரு போட்டியில் சீனா (3-0), ஜப்பானை (5-1) வீழ்த்தியது. நேற்று தனது மூன்றாவது போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. போட்டி துவங்கியது முதல் இந்திய வீரர்கள் ஆதிக்கம் துவங்கியது.
ராஜ்குமார் 'ஹாட்ரிக்'
3வது நிமிடத்தில் ராஜ்குமார், முதல் கோல் அடித்தார். 6வது நிமிடத்தில் இளம் வீரர் அராய்ஜீத் சிங், ஒரு கோல் அடித்தார். அடுத்த நிமிடம் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை வீணாக்காமல் கோலாக மாற்றினார் ஜுக்ராஜ் சிங். முதல் 7 நிமிடத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
22 வது நிமிடம் கிடைத்த மற்றொரு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 25வது நிமிடம் ராஜ்குமார் இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 5-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய ராஜ்குமார், 33வது நிமிடம் ஒரு கோல் அடித்தார். இது 'ஹாட்ரிக்' கோலாக அமைந்தது.
மறுபக்கம் மலேசிய வீரர் அகிமுல்லா, ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
அரையிறுதிக்கு தகுதி
இளம் வீரர் அராய்ஜீத் சிங், 39வது நிமிடம் மற்றொரு கோல் அடிக்க, இந்திய அணி 8-1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 9 புள்ளி எடுத்தது. 2 போட்டி மீதமுள்ள நிலையில் இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று தனது 4வது போட்டியில் இந்திய அணி, தென் கொரியாவுடன் மோத உள்ளது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி 2-1 என ஜப்பானை வென்றது.