ADDED : ஜூன் 04, 2026 09:53 PM

புதுடில்லி: சீனாவின் ஆர்டோஸ் நகரில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (ஜூலை 9-12) நடக்கவுள்ளது. இதற்கான, 54 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் 'போல் வால்ட்' வீரர்களான தேவ் குமார் மீனா, குல்தீப் குமார், நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங், ஈட்டி எறிதல் வீரர் ஷிவம் லோஹகரே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த பெடரேஷன் கோப்பை சீனியர் தடகளத்தில் தேவ் மீனா, குல்தீப் குமார் புதிய தேசிய சாதனை (5.45 மீ.,) படைத்திருந்தனர். ஈட்டி எறிதலில் ஷிவம் (81.71 மீ.,) தங்கம் வென்றிருந்தார். இவர்கள், ஆசிய தடகளத்திலும் முத்திரை பதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரையிறுதியில் இந்தியா-சீனா
காகமிகஹாரா: ஜப்பானில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இன்று நடக்கவுள்ள பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியா, சீனா அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் மலேசியா (2-1), தென் கொரியா (3-1), சிங்கப்பூர் (25-0) அணிகளை வீழ்த்திய இந்திய அணிக்கு நவ்ஷீன் நாஸ் (10 கோல்), கீதாஸ்ரீ (5), ஸ்வீட்டி குஜுர் (4) உள்ளிட்டோர் கைகொடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம்.
ஆண்களுக்கான அரையிறுதியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் கஜகஸ்தானை (13-0) வீழ்த்திய இந்தியா, ஜப்பானிடம் (2-4) தோல்வியடைந்தது. பின் எழுச்சி கண்ட இந்தியா, தென் கொரியா (4-1), சீனதைபே (13-1) அணிகளை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இதுவரை 32 கோல் அடித்துள்ள இந்திய அணிக்கு கேப்டன் கேதன் குஷ்வாஹா (7 கோல்), ஆஷிஸ் தானி பூர்த்தி (6), ஷாரூக் அலி (3), காஜீ கான் (3) பலம் சேர்க்கின்றனர். இவர்கள் மீண்டும் அசத்தினால் சுலப வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறலாம்.
இந்தியா-தஜிகிஸ்தான் மோதல்
ஹிசோர்: தஜிகிஸ்தான் சென்றுள்ள இந்திய கால்பந்து அணி, இரண்டு சர்வதேச நட்பு போட்டியில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடக்கிறது. இரண்டாவது போட்டி ஜூன் 7ல் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு ஹிசோரில் நடந்த நேஷன்ஸ் கோப்பையில் இந்திய அணி 2-1 என தஜிகிஸ்தானை வென்றிருந்தது. இத்தொடரில் இந்திய அணி 3வது இடம் பிடித்தது. அதன்பின் விளையாடிய 6 போட்டியில், ஒரு வெற்றி (எதிர்: ஹாங்காங்), ஒரு 'டிரா' (எதிர்: சிங்கப்பூர்), 4 தோல்வியை (எதிர்: சிங்கப்பூர், வங்கதேசம், ஜமைக்கா, ஜிம்பாப்வே) பதிவு செய்தது. இன்று இந்திய வீரர்கள் எழுச்சி கண்டால் வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.
