/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்
/
ஆசிய ஹேண்ட்பால்: இந்தியா ஏமாற்றம்
ADDED : டிச 04, 2024 09:56 PM

புதுடில்லி: ஆசிய ஹேண்ட்பால் லீக் போட்டியில் இந்திய அணி 30-32 என, ஈரானிடம் தோல்வியடைந்தது.
டில்லியில், பெண்களுக்கான ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 20வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 8 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தியது. நேற்று நடந்த 2வது லீக் போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் இந்திய அணி 15-16 என பின்தங்கி இருந்தது. இரண்டாவது பாதியில் ஈரான் வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 30-32 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான் அணி 47-6 என ஹாங்காங்கை வென்றது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் சீனா (47-10, எதிர்: சிங்கப்பூர்), தென் கொரியா (30-20, எதிர்: கஜகஸ்தான்) அணிகள் வெற்றி பெற்றன.
இதுவரை விளையாடிய 2 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் இந்திய அணி 'பி' பிரிவில் 2வது இடத்தில் உள்ளது. நாளை நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும். மற்றொரு போட்டியில் ஈரான் (2 புள்ளி), ஹாங்காங் (0) அணிகள் மோதுகின்றன.