/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹாக்கி: அசத்துமா இந்தியா
/
ஆசிய ஹாக்கி: அசத்துமா இந்தியா
ADDED : செப் 08, 2024 12:40 AM

ஹுலுன்பியுர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இந்திய அணி மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென் கொரியா என 6 அணிகள் பங்கேற்கின்றன. 'ரவுண்ட்-ராபின்' முறையில் போட்டிகள் நடக்கும். அனைத்து அணிகளும் தங்களுக்குள் மோத வேண்டும். வெற்றிக்கு 3, 'டிரா'வுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (செப். 16) முன்னேறும். செப். 17ல் பைனல் நடக்க உள்ளது.
பாகிஸ்தானுடன் 'விறுவிறு': 'நடப்பு சாம்பியனாக' இந்தியா களமிறங்குகிறது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த பைனலில் மலேசியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. இம்முறை ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குஷியில் களமிறங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு (செப். 14) அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை நான்கு முறை வென்ற இந்திய அணி, மீண்டும் ஆதிக்கம் செலுத்தலாம்.
கேப்டன் நம்பிக்கை:இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,''கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்றது எங்களுக்கு உத்வேகம் அளித்தது. தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றோம். இந்த முறையும் வெற்றி பெற்று, அடுத்த ஒலிம்பிக் பயணத்தை புதிதாக துவக்க உள்ளோம். ஒலிம்பிக்கில் விளையாடிய 10 வீரர்கள் தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர். இளம் வீரர்களும் முத்திரை பதிக்கலாம். தாக்குதல் பாணியிலான ஆட்டம், 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை கோலாக மாற்றுவது எங்களது பலம். தற்காப்பு ஆட்டத்திலும் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். உலக 'ரேங்கிங்' பட்டியலில் அதிக புள்ளி பெற, இத்தொடரில் சாதிப்பது முக்கியம்,''என்றார்.
அழகான மைதானம்: இந்திய துணை கேப்டன் விவேக் சாகர் பிரசாத் கூறுகையில்,'' ஒரு வாரத்திற்கு முன்பாகவே சீனா வந்துவிட்டோம். இங்குள்ள ஆடுகளம், சூழ்நிலைகளை தெரிந்து கொண்டோம். மாலை நேரத்தில் குளிர் வாட்டுகிறது. அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சீனாவின் நியர்ஜி அணை பகுதியில் ரம்மியமான சூழலில் மைதானம் அமைந்துள்ளது. உலகின் அழகான ஹாக்கி மைதானமாக திகழ்கிறது. வரும் 2026ல் நடக்க உள்ள ஆசிய விளையாட்டில் சாதிக்க, தற்போதைய தொடர் உதவும். தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாக்கி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிப்போம்,''என்றார்.