வரலாறு படைத்த பிரனவி, கும்கும்: ஆசிய விளையாட்டு கோல்ப், வில்வித்தையில் தங்கம்
வரலாறு படைத்த பிரனவி, கும்கும்: ஆசிய விளையாட்டு கோல்ப், வில்வித்தையில் தங்கம்
ADDED : அக் 03, 2026 11:17 PM

அய்ச்சி: ஆசிய விளையாட்டு கோல்ப் போட்டியில் பிரனவி, வில்வித்தையில் கும்கும் முதன் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தனர்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான கோல்ப் போட்டி, தனி நபர் பிரிவில் இந்தியா சார்பில் பிரனவி, 23, பங்கேற்றார். முதல் மூன்று நாள் முடிவில், மொத்தம் 195 ஸ்டிரோக் பெற்று முதலிடத்தில் இருந்தார். நேற்று கடைசி நாள் சற்று பின்தங்கிய பிரனவி, ஒட்டுமொத்தமாக 265 ஸ்டிரோக் பெற்று முதலிடம் பிடித்தார். ஆசிய விளையாட்டு கோல்ப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார்.
பெண்கள் அணிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் அதித்தி அசோக், பிரனவி அர்ஸ், திக் ஷா தாகர் பங்கேற்றனர். மொத்தம் 546 ஸ்டிரோக் பெற்று, இரண்டாவது இடம் பிடிக்க, இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
கும்கும் கலக்கல்
பெண்களுக்கான வில்வித்தை, தனிநபர் 'ரிகர்வ்' பிரிவில் இந்தியாவின் 17 வயது வீராங்கனை கும்கும், பங்கேற்றார். பைனலில் தென் கொரியாவின் எஜினை சந்தித்தார். முதல் 4 செட் முடிவில் 3-5 என பின்தங்கிய கும்மும், 5 செட் முடிவில் 5-5 என சமன் செய்தார். வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இதில் கும்கும் 10-8 என அசத்தினார். முடிவில் கும்கும் 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டு ரிகர்வ் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார். தவிர, 2028, லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
ஆண்கள் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் நீரஜ், தீரஜ் மோதினர். இதில் நீரஜ் 6-4 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
மல்யுத்தம்: அமன் அசத்தல்
ஆண்களுக்கான மல்யுத்தம், 57 கிலோ பிரிவு பைனலில், பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத், நடப்பு உலக சாம்பியன், வட கொரியாவின் ஹான் சோங் சாங்கை சந்தித்தார். முதலில் 4-1 என முந்திய அமன், பின் 4-6 என பின்தங்கினார். கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட அமன், 11-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் தட்டிச் சென்றார்.
பெண்களுக்கான 53 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அன்டிம் பங்கல், ஜப்பானின் கியூகா மோ மோதினர். முதல் செட்டில் 0-2 என பின்தங்கிய அன்டிம், முடிவில் 1-9 என தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
* ஆண்களுக்கான 97 கிலோ பிரிவு, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா, மங்கோலியாவின் கன்பாட்டரை சந்தித்தார். இதில் 2-1 என வெற்றி பெற்ற தீபக், வெண்கலம் பெற்றார்.
ஒட்டுமொத்தமாக நடப்பு தொடரில், மல்யுத்தத்தில் இந்தியா 6 பதக்கம் (2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) வென்றது.
தடகளத்தில் ஆதிக்கம்
இந்தியாவுக்கு இம்முறை தடகளத்தில் அதிகபட்சமாக 24 பதக்கம் (1 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம்) கிடைத்தது. அதன்பின் துப்பாக்கி சுடுதலில் 15, வில்வித்தையில் 9, குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் தலா 6, ஸ்குவாஷில் 5 பதக்கம் கிடைத்தன.
* பாய்மரப்படகு போட்டியில் 3, கிரிக்கெட், ஹாக்கி, கபடி, கோல்ப் போட்டிகளில் தலா 2, பளுதுாக்குதல், உஷு, பாட்மின்டன், குராஷ், தற்காப்பு கலை, படகு வலித்தல், செபக்தக்ரா, சாப்ட் டென்னிஸ், டேபிள் டென்னிசில் தலா ஒரு பதக்கம் கிடைத்தன.
ஐந்து பேர்... மூன்று பதக்கம்
இம்முறை அதிக பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில், கும்கும் (வில்வித்தை), நீரு தண்டா (துப்பாக்கி சுடுதல்), வித்யா ராம்ராஜ் (தடகளம்), குல்வீர் சிங் (தடகளம்), ருத்ராங்க் ஷ் பாட்டீல் (துப்பாக்கி சுடுதல்) முதலிடம் பிடித்தனர்.
இதில் கும்கும், நீரு தலா 2 தங்கம், ஒரு வெள்ளி என, 3 பதக்கம் வென்றனர். தமிழகத்தின் வித்யா, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கம் வென்றார். குல்வீர், ருத்ராங்க் ஷ் தலா 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 3 பதக்கம் பெற்றனர்.
