கடைசி நிமிடத்தில் இந்தியா வெற்றி: வீழ்ந்தது பாக்.,
கடைசி நிமிடத்தில் இந்தியா வெற்றி: வீழ்ந்தது பாக்.,
ADDED : அக் 01, 2026 11:02 PM

ககமிகஹரா: ஆசிய விளையாட்டு ஹாக்கியில் நடப்பு சாம்பியன் இந்திய ஆண்கள் அணி பைனலுக்கு முன்னேறியது. அரையிறுதியில் பாகிஸ்தானை 4-3 என வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் 'ஏ' பிரிவில் முதலிடம் பெற்ற இந்திய அணி, 'பி' பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தானை எதிர்கொண்டது.
போட்டி துவங்கிய 5, 13 வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளில், இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தலா ஒரு கோல் அடித்தார். சுஹ்ஜீத் சிங் (23) தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது.
முதல் பாதி முடிய 30 வினாடிக்கு முன் பாகிஸ்தான் வீரர் மஹ்மூத் (30) ஒரு கோல் அடித்தார். பின் சாஹித் (45), ராணா (49) கோல் அடிக்க ஸ்கோர் 3-3 என சமன் ஆனது.
49.2 வினாடி
போட்டியின் கடைசி நிமிடம் முடிவதற்கு, 49.2 வினாடி இருந்த போது, இந்திய வீரர் அபிஷேக், 'ரிவர்ஸ் பிளிக்' முறையில் பந்தை அடித்து கோலாக மாற்றி அசத்தினார். முடிவில் இந்திய அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக (2023, 2026) பைனலுக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் மலேசிய அணி 2-1 என தென் கொரியாவை வென்றது.
நாளை நடக்கும் பைனலில் இந்தியா, மலேசிய அணிகள் மோத உள்ளன.
12வது முறை
இந்திய ஹாக்கி அணி ஆசிய விளையாட்டு பைனலுக்கு 12வது முறையாக (2026) முன்னேறியது. முன்னதாக 1966, 1998, 2014, 2023ல் தங்கம் வென்றது. இம்முறையும் அசத்தினால், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு (2028) தகுதி பெறலாம்.
