தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ இந்திய ஹாக்கி அணிக்கு நீல நிற 'ஜெர்சி': ஆசிய விளையாட்டில் மாற்றம்

இந்திய ஹாக்கி அணிக்கு நீல நிற 'ஜெர்சி': ஆசிய விளையாட்டில் மாற்றம்

இந்திய ஹாக்கி அணிக்கு நீல நிற 'ஜெர்சி': ஆசிய விளையாட்டில் மாற்றம்


ADDED : செப் 08, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணியினர், மீண்டும் பாரம்பரிய நீல நிற 'ஜெர்சி' அணிந்து களமிறங்க உள்ளனர்.

பெல்ஜியம், நெதர்லாந்தில் சமீபத்தில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதற்கான இந்திய ஆண்கள், பெண்கள் அணிகளின் 'ஜெர்சி', திடீரென காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது. நீல நிறத்தை நிராகரித்ததற்கு இந்திய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, சர்ச்சை கிளம்பியது. 'ஆடுகளம் நீல நிறத்தில் இருப்பதால், காவி 'ஜெர்சி' தேர்வு செய்யப்பட்டதாக' ஹாக்கி இந்தியா அமைப்பு விளக்கம் அளித்தது.

உலக கோப்பையை 51 ஆண்டுகளுக்கு பின் வெல்லும் இலக்குடன், காவி 'ஜெர்சி'யில் களமிறங்கிய இந்திய ஆண்கள் அணி, 8வது இடம் பிடித்தது. பெண்கள் அணி சற்று முன்னேறி 5வது இடம் பெற்றது.

நீலம் முதலிடம்

அடுத்து ஜப்பானில் (அய்ச்சி-நகோயா) நடக்க உள்ள ஆசிய விளையாட்டில் (செப். 19-அக். 4) பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணிகளின் 'ஜெர்சி' மீண்டும் நீல நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இது பற்றி 'ஹாக்கி இந்தியா' அமைப்பின் தலைவர் திலிப் டிர்கே கூறுகையில்,''எங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்யும்படி இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டுக் கொண்டது. நீல நிறத்திற்கு முன்னுரிமை கொடுத்தோம். இரண்டாவதாக காவி நிறத்தை தேர்வு செய்தோம். 'ஜெர்சி' நிறம் நிரந்தரம் அல்ல என உலக கோப்பைக்கு முன்பே சொல்லி இருக்கிறேன்,''என்றார்.

தங்கம் முக்கியம்

இந்திய ஹாக்கி அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''ஆசிய விளையாட்டு, ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் 'ஜெர்சி'யை இந்திய ஒலிம்பிக் சங்கம் வடிவமைக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிடமும் அவர்களது விருப்பமான நிறம் பற்றி கேட்கப்படும். எங்கள் விருப்பத்தை தெரிவித்தோம். இதற்கும் உலக கோப்பை 'ஜெர்சி' குறித்து எழுந்த சர்ச்சைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை,''என்றார்.

ஆசிய விளையாட்டு ஹாக்கியில் இம்முறை இந்திய ஆண்கள் அணி ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் பங்கேற்கிறது. பெண்கள் அணிக்கு கேப்டனாக சலிமா உள்ளனர். இரு அணிகளும் நீல நிற 'ஜெர்சி'யில், தங்கம் வென்றால், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் (2028) போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம்.



மத்திய அமைச்சர் வாழ்த்து

ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்கள் நேற்று டில்லியில் இருந்து ஜப்பான் புறப்பட்டுச் சென்றனர். இவர்களை வழியனுப்பும் விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா பங்கேற்றனர். மன்சுக் மாண்டவியா கூறுகையில்,''2014ல் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 57 பதக்கம் தான் வென்றது. 2023ல் 107 பதக்கமாக அதிகரித்தது. நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. ஜப்பானில் இந்திய நட்சத்திரங்கள் துணிச்சலாக செயல்பட்டு சாதிக்க வேண்டும். ஹாக்கி வீரர், வீராங்கனைகள் உலக கோப்பை ஏமாற்றத்தை மறந்துவிட்டு, ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்ல வேண்டும்,''என்றார்.

பி.சி.சி.ஐ., திருப்தி

ஆசிய விளையாட்டு, 'டி-20' போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. நமது கிரிக்கெட் வீரர்கள் தங்குவதற்கு போதிய வசதி செய்து தரப்படவில்லை என புகார் கூறப்பட்டது.

இது பற்றி பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,''ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதி கிடையாது. இருப்பினும் ஆசிய விளையாட்டு அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ள ஓட்டலில் தங்குவோம். வீரர்கள் தனித்தனி அறையில் தங்குவர். போட்டி நடக்கும் நகோயாவில் நிறைய ஓட்டல்கள் இல்லை. டோக்கியோ, ஒசாகா போன்ற பெரிய நகரங்களில் தங்கலாம். இங்கிருந்து நகோயாவுக்கு 'புல்லட்' ரயிலில் வர ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். தவிர, ஆசிய விளையாட்டில் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கவே விரும்புகிறோம். மைதானம், ஆடுகளம், 'டிரஸ்சிங் ரூம்' தான் பிரச்னையாக இருந்தது. இதை ஆய்வு செய்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் குழுவினர், அனைத்தும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us