ஆசிய விளையாட்டில் அதிருப்தியா * ஏமாற்றத்தில் வீரர், வீராங்கனைகள்
ஆசிய விளையாட்டில் அதிருப்தியா * ஏமாற்றத்தில் வீரர், வீராங்கனைகள்
ADDED : செப் 01, 2026 11:04 PM

புதுடில்லி: ''ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் விரும்பினால், சொந்த செலவில் தங்கிக் கொள்ளலாம்,'' என ஜே.சி.ஏ., தலைமை அதிகாரி நவோகி அலெக்ஸ் மியாஜி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் அச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. பெரும்பாலான நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கப்பல்கள், கன்டெய்னர் ஓட்டல்களில் தான் தங்கவைக்கப்பட உள்ளனர். இதனிடையே, கிரிக்கெட் மைதானத்தில் உடைமாற்றும் இடம் உட்பட பல்வேறு வசதிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை, தவிர, மைதானத்தில் இருந்து 500 மீ., துாரத்தில் கழிவறை, 20 கி.மீ., தொலைவில் தங்குமிடம் உள்ளதாக பல்வேறு அணிகள் அதிருப்தி தெரிவித்தன.
இதுகுறித்து ஜப்பான் கிரிக்கெட் சங்க தலைமை அதிகாரி அலெக்ஸ் மியாஜி கூறியது:
ஆசிய விளையாட்டினை ஆசிய ஒலிம்பிக், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்து, ஜப்பான் ஒருங்கிணைப்பு குழு நடத்துகிறது. பல்வேறு விஷயங்களில் நாங்கள் நேரடியாக தலையிடவில்லை. முடிந்தவரை கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த முயற்சிக்கிறோம்.
கிரிக்கெட்டில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு ஓட்டல் வசதிகள் வழங்கப்படுகிறது. ஒருவேளை அணி நிர்வாகம் விரும்பினால், தங்களது சொந்த செலவில் தங்குமிட வசதிகளை செய்து கொள்ளலாம். மற்றபடி கழிவறை வசதிகள் மைதானத்தில் தான் உள்ளன. மைதானத்தில் ஆடுகளம் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
'ஸ்மார்ட் டிராக்' பயிற்சி
ஆசிய விளையாட்டில் பங்கேற்க உள்ள இந்தியாவின் அவினாஷ் சபிள், பாருல் சவுத்ரி உட்பட 6 தடகள நட்சத்திரங்கள் பெங்களூரு இந்திய விளையாட்டு ஆணையத்தில் 'ஸ்மார்ட் டிராக்' பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் படி, போட்டியை துவக்கிய நேரம், அவர்களது வேகம், கால்களுக்கு இடையிலான இடைவெளி துார அளவு என அனைத்தும் கணக்கிடப்படுகிறது. இதனால் வீரர்/வீராங்கனைகள் தங்களது செயல்திறனை துல்லியமாக புரிந்து கொண்டு தேவையான மாறுதல்களை செய்து கொள்ளலாம்.
