ADDED : ஏப் 19, 2025 11:09 PM

கோலாலம்பூர்: அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9-17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், இத்தொடரின் ஐந்தாம் நிலை வீராங்கனை, இந்தியாவின் அனாஹத் சிங் 17,ஹாங்காங்கின் ஹெலன் டங்கை சந்தித்தார். 21 நிமிடம் மட்டும் நடந்த இப்போட்டியில் அனாஹத் 3-0 (11-2, 11-7, 11-6) என வென்று பைனலுக்கு முன்னேறினார். தவிர ஹெலனுக்கு எதிரான 5 போட்டியிலும், அனாஹத் வெற்றி பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ஆகான்ஷா, 1-3 என (3-11, 10-12, 12-10, 8-11) ஹாங்காங்கின் டோபை டிசேவிடம் வீழ்ந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, 3-1 என (11--7, 11--6, 7--11, 11--4) ஹாங்காங்கின் சி ஹிம் வாங்கை வீழ்த்தினார். அனாஹத், சோட்ரானி இன்று வென்றால் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெறலாம்.