தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ ஆசிய தடகளம்: இந்தியா பதக்க மழை * 4X400 மீ., ஓட்டத்தில் தங்கம்

ஆசிய தடகளம்: இந்தியா பதக்க மழை * 4X400 மீ., ஓட்டத்தில் தங்கம்

ஆசிய தடகளம்: இந்தியா பதக்க மழை * 4X400 மீ., ஓட்டத்தில் தங்கம்


ADDED : மே 28, 2025 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2025 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குமி: ஆசிய தடகளத்தின் கலப்பு 'ரிலே' ஓட்டத்தில் இந்தியா தங்கம் கைப்பற்றியது. பிரவீன் சித்ரவேல், ரூபல் உள்ளிட்டோர் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர்.

தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்தியா சார்பில் 58 பேர் உட்பட, 43 நாடுகளில் இருந்து 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று கலப்பு அணிகளுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டம் ('ரிலே') நடந்தது. இந்தியா சார்பில் சந்தோஷ்குமார், ரூபல், விஷால் தென்னரசு, சுபா களமிறங்கினர். துவக்கத்தில் இருந்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 3வது சுற்றில் சீன வீரர் சவால் கொடுத்த போதும், கடைசியில் இந்தியா, 3 நிமிடம், 18.12 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. சீனா (3:20.52), இலங்கை (3:21.95) அணிகள் அடுத்த இரு இடம் பிடித்தன.

பின் இரு அணிகளும் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. இதையடுத்து கஜகஸ்தான் (3:22.70), தென் கொரியாவுக்கு (3:22.87), வெள்ளி, வெண்கலம் வழங்கப்பட்டன.

பிரவீன் வெள்ளி

ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நடந்தது. இந்தியா சார்பில் பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பிரவீன், 3வது வாய்ப்பில் அதிகபட்சம் 16.90 மீ., துாரம் தாண்டி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். சீனாவின் ஜு யமிங் (17.06), தென் கொரியாவின் குயுமின் (16.82) முதல், 3வது இடம் பெற்றனர். அப்துல்லா (16.72) 4வது இடம் பிடித்தார்.

ரூபல் கலக்கல்

பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியா சார்பில் ரூபல், வித்யா பங்கேற்றனர். இதில் 52.68 வினாடி நேரத்தில் வந்த ரூபல், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இது இவரது இரண்டாவது பதக்கம் ஆனது.

ஜப்பானின் மட்சுமோட்டோ (52.17) தங்கம், உஸ்பெகிஸ்தானின் ஹக்மோவா (52.79) வெண்கலம் வென்றனர். தமிழகத்தின் வித்யா (53.00) 4வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

பூஜா அசத்தல்

பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா, லில்லி களமிறங்கினர். 4 நிமிடம், 10.83 வினாடி நேரத்தில் வந்த பூஜா, வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார். லில்லி (4:13.81) 4வது இடம் பெற்றார். ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் யூனஸ் ஷா, 3 நிமிடம், 43.03 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

தேஜஸ்வினி அபாரம்

ஆண்களுக்கான டெகாத்லான் (10) போட்டி நடக்கிறது. முதல் நாளில் நடந்த 5 போட்டி முடிவில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர், 4205 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தார். நேற்று நடந்த 110 மீ., தடை ஓட்டம், வட்டு எறிதல், போல்வால்ட், ஈட்டி எறிதல், கடைசியாக 1500 மீ., ஓட்டம் நடந்தது.

முடிவில் தேஜஸ்வின் சங்கர் 7618 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். கடந்த 2023ல் இவர் வெண்கலம் வென்றிருந்தார். 16 புள்ளி கூடுதலாக பெற்ற சீனாவின் பெய் ஜியாங் (7634) தங்கம் வென்றார்.

0.02 வினாடியில்...

ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனல் நடந்தது. கத்தாரின் இப்ராஹிம் (45.33 வினாடி), ஜப்பானின் சடோ (45.50), இலங்கையின் கலிங்கா (45.55) முதல் மூன்று இடம் பெற்றனர். 0.02 வினாடி (45.57) பின்தங்கிய இந்தியாவின் விஷால் தென்னரசு (தமிழகம்) வெண்கல பதக்க வாய்ப்பை இழந்து, 4வது இடம் பெற்றார்.

பைனலில் ஷைலி

பெண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதிச்சுற்று நடந்தது. இந்தியாவின் ஷைலி (6.17 மீ.,), ஆன்சி (6.14) இருவரும் பைனலுக்கு தகுதி பெற்றனர்.

110 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி (13.18 வினாடி) அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

8 பதக்கம்

ஆசிய தடகளத்தில் 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என இதுவரை 8 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதல் இரு இடத்தில் சீனா 15 (11 தங்கம், 4 வெள்ளி), ஜப்பான் 14 (3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) பதக்கத்துடன் முதல் இரு இடத்தில் உள்ளன.

தமிழகம் அபாரம்

கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்ற இந்தியா சார்பில் களமிறங்கிய சந்தோஷ்குமார், விஷால் தென்னரசு, சுபா தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் சுபா, கடந்த 2023 ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார்.

தவிர, தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் (வெள்ளி), செர்வினும் (வெண்கலம்) பதக்கம் வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us