தங்கம் வென்றார் பூஜா சிங் * ஆசிய யூத் தடகளத்தில் சாதனை
தங்கம் வென்றார் பூஜா சிங் * ஆசிய யூத் தடகளத்தில் சாதனை
ADDED : மே 29, 2026 10:59 PM

ஹாங்காங்: ஆசிய யூத் தடகளம் உயரம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார் பூஜா சிங்.
ஹாங்காங்கில் 20 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் பூஜா சிங் 19, பங்கேற்றார்.
இதில் 1.93 மீ., உயரம் தாவிய பூஜா, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார். முன்னதாக 2012ல் சஹானா குமாரி, 1.92 மீ., தாவி இருந்தார். தவிர, இது பூஜாவின் சிறந்த செயல்பாடு ஆனது. சமீபத்தில் (ஏப்ரல்) இந்திய தடகள சீரிசில் 1.90 மீ., உயரம் தாவி இருந்தார்.
5000 மீ., நடை பந்தயத்தில் இந்திய வீரர் நிதின் குப்தா, 19 நிமிடம், 47.49 வினாடியில் வந்து தங்கம் வென்றார். பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் அமனத் கம்போஜ் (52.24 மீ.,) தங்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான டெகாத்லான் போட்டியில் இந்தியாவின் ராகுல் ஜஹார், 7185 புள்ளி எடுத்து தங்கம் வென்றார். தவிர இந்தியாவின் சாதனா தேவி ('டிரிபிள் ஜம்ப்', 12.84 மீ.,), உப்கர் (ஆண்கள் டெகாத்லான்) வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் நீரு பதக் (53.23 வினாடி) வெண்கலம் வென்றார்.
இதுவரை இந்தியா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என 8 பதக்கம் வென்றுள்ளது.
