UPDATED : ஜூன் 20, 2026 12:19 AM
ADDED : ஜூன் 18, 2026 11:48 PM

தோஹா: கத்தாரின் தோஹாவில் டைமண்ட் லீக் தடகளம் நடந்தது. இதில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 28, பங்கேற்றார். கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பின், நடப்பு சீசனில் இவர் பங்கேற்ற முதல் போட்டி இது.
இம்முறை முதல் வாய்ப்பில் 'பவுல்' செய்தார். அடுத்த மூன்று வாய்ப்பில் 82.77, 85.65, 83.45 மீ., துாரம் எறிய, 'டாப்-3' இடத்துக்கு முன்னேறினார்.
மறுபக்கம் 4வது வாய்ப்பில் மிரட்டிய இலங்கையின் ருமேஷ் தரங்கா (88.68) முதலிடம் பெற்றார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (86.38), அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் (85.99) 2, 3வது இடம் பிடித்தனர். 5 வாய்ப்பில் ஏமாற்றிய நீரஜ் சோப்ராவுக்கு, நான்காவது இடம் கிடைத்தது.
காமன்வெல்த் தகுதி
எனினும், குறைந்தபட்ச தகுதி துாரமான 82.61 மீ.,க்கும் அதிகமாக, ஈட்டி எறிந்ததால், காமன்வெல்த் விளையாட்டில் (ஜூலை 23-ஆக. 2, கிளாஸ்கோ) பங்கேற்க தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா.
